
தூத்துக்குடி- மைசூர் ரயிலில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்த நபர்களுக்கு அபராதம் ரூ1.64 லட்சம் வசூல் – தெற்கு ரயில்வே தகவல்
மத்திய ரயில்வே அமைச்சர் கடந்த வியாழக்கிழமை அன்று இந்திய ரயில்வே மண்டல பொது மேலாளர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் உரிய பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்யும் பயணிகள் பற்றி “ரயில் மதாத்” செயலியில் புகார்கள் அதிகமாக வருவது குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார். மேலும் இதுபோன்ற புகார்களை தவிர்க்கவும் முன்பதிவு செய்த பயணிகள் இடையூறு இல்லாமல் பயணம் செய்யவும் அதிரடி சோதனைகள் நடத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து மதுரை கோட்டத்தில் வைகை, குருவாயூர், பாலக்காடு – பழனி – சென்னை, தூத்துக்குடி – மைசூர் ரயில்களில் கடந்த ஐந்து நாட்களாக பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினார். இதில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் பிடிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து அபராதமாக ரூபாய் 1,64,415 வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.