
கோவில்பட்டியில் பெண்ணை மிரட்டி, சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்தியவர் கைது – பயன்படுத்திய வாள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே வளர்த்து வந்த தெரு நாயை கடந்த 16.06.2024 அன்று அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் மகேஷ்குமார் (32), பஞ்சவர்ணம் மகன் சோலைராஜ் (23) மற்றும் கோவில்பட்டி ஊரணி தெருவைச் சேர்ந்த சாமுவேல் மகன் ஜெபக்குமார் (27) ஆகியோர் அடித்து கொன்றதையடுத்து பெண் அளித்த புகாரின் பேரின் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் கடந்த 17.06.2024 அன்று அதிகாலை பெண்ணின் வீட்டிற்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் சுந்தர் (29) என்பவர் மகேஷ்குமார், ஜெபக்குமார், சோலைராஜ் ஆகியோர் தனது நண்பர்கள் என்றும் நாயை அடித்துக் கொன்ற வழக்கில் அவர்கள் மீது எப்படி புகார் கொடுக்கலாம் என்றும் சுந்தர் கையில் வாளுடன் பெண்ணை மிரட்டியதுடன் அவர் வீட்டு வாசலில் இருந்த சிசிடிவி கேமராவையும் உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளார்.
இதுகுறித்து மேற்படி பெண் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நேற்று சுந்தரை கைது செய்து அவரிடமிருந்த வாளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.