
தூத்துக்குடி அருகே கோரவிபத்து: தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு- ஒருவர் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியில் குடிநீர் பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதி மூன்று பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்காணி தேவர் தெரு பகுதியில் உள்ள குடிநீர் பைப்புகளில் இன்று காலையில் பெண்கள் குடிதண்ணீர் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அதிவேகமாக வந்த இனோவா கார் ஒன்று அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் முக்காணி வடக்கு யாதவர் தெருவை சேர்ந்த பலவேசம் மனைவி நட்டார் சாந்தி (45), சித்திரைவேல் மனைவி அமராவதி ( 59), ராஜ்குமார் மனைவி பார்வதி (40), ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த சுந்தரம் மனைவி சண்முகத்தாய் (49) என்பவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில், காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது பெருங்குளம் உடையடி தெருவை சேர்ந்த தர்மராஜ் மகன் மணிகண்டன் (27) என்பதும், அவர் ஓட்டி வந்த (TN 69 BC 9777) இனோவா கிரிஸ்டா கார் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து காரை பறிமுதல் செய்த ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிதண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.