
தூத்துக்குடியில் குடல் அடைப்புடன் பிறந்த 4 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றி அரசு மருத்துவர்கள் சாதனை
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறக்கும்போதே குடல் அடைப்புடன் பிறந்த 4 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடல் அடைப்பு காரணமாக வயிற்றுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த குடல் அடைப்பு காரணமாக பிறந்த 4 குழந்தைகளும் 2 அல்லது 3 நாட்களுக்குள் உயிழக்கக்கூடும் என்பதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.
இதையடுத்து மருத்துவர்கள் குழந்தைகளை தீவிர பரிசோதனைக்குபிறகு தலைமை மருத்துவர் டாக்டர். வெங்கட சரவணன் மற்றும் உதவி பேராசிரியர் டாக்டர் . முத்துக்குமரன் ஆகியோர் அறுவை சிகிச்சை செய்து குடல் அடைப்பை நீக்கி 4 குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றி உள்ளனர்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்த நான்கு குழந்தைகளும் பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து இன்று பெற்றோர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்தனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் நான்கு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.
நிகழ்வில் மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.