டெல்லியில் இன்று மாலை கூடுகிறது பா.ஜ ஆட்சிமன்ற குழு : உ.பி, உத்தரகாண்ட் முதல்வர்கள் தேர்வு குறித்து ஆலோசனை
பாரதிய ஜனதா ஆட்சியை கைப்பற்றியுள்ள உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநில முதல்வர்களை தேர்வு செய்ய அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. டெல்லியில் பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் மாலை 6 மணியளவில் இக்கூட்டம் கூடுகிறது. முதலில் தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து நடைபெறும் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் ஆட்சியை வசப்படுத்தி விட்ட உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கான முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் யார் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பாரதிய ஜனதாவின் வெற்றிக்கு வழிவகுத்த பெருமை முழுவதும் மோடியையே சேரும் என அக்கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். வெற்றி பற்றி கருத்து தெரிவித்துள்ள கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர், ஏழைகள் மற்றும் பெண்கள் என ஒவ்வொருவரும் தங்களுக்காக வாக்களித்துள்ளனர். இதன் மூலம் மக்கள் எங்களோடு இருப்பதை உறுதிபடுத்தி கொள்ள முடிகிறது என்றனர்.
312 தொகுதிகளுடன் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள உத்திரப்பிரதேசத்தை பொறுத்த வரை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கட்சியின் மாநிலத் தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. மாநில பாரதிய ஜனதா துணைத் தலைவர் தினேஷ் சர்மா, எம்.பி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சத்பால் மகராஜ் முதலமைச்சருக்கான போட்டியில் உள்ளார். இந்நிலையில் 77 தொகுதிகளுடன் பஞ்சாப்பில் ஆட்சியை கைபற்றியுள்ள காங்கிரஸ் கட்சியின் MLA-க்கள் கூட்டம் இன்று மதியம் நடைபெற உள்ளது. மேலும் மணிப்பூர், கோவா மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.