
சாலை வசதி கோரி – கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் ஒரே வளாகப் பகுதியில் இயங்குகின்றன. குறிப்பாக, கோட்ட தபால் அலுவலகம், பி.எஸ்.என்.எல்., உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களும், ஆர்.டி.ஓ., தாலுகா, கருவூலம், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட மாநில அரசு அலுவலகங்களும், அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, கோர்ட், கிளை சிறை உள்ளிட்டவைகளும் ஒரு வளாகப்பகுதிகளுக்குள் அமைந்துள்ளன.
அரசு அலுவலங்களுக்கு வரும் மக்கள், பள்ளி மாணவிகள், கோர்ட்டுக்கு வரும் மக்கள் என தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வளாகத்தில் உள்ள சாலையில் பயணித்து வருகிறார்கள்.
ஆனால், இந்த சாலை போடபட்டு 10 ஆண்டுகளுக்கும் அதிகமாகிவிட்டது. இப்போது, இந்த சாலை போக்குவரத்துக்கு லாயகற்ற வகையில் குண்டும், குழியுமான சாலையாக மாறிவிட்டது. ஜல்லி கற்கள் பெயர்ந்து மக்கள் மற்றும் மாணவிகளின் பாதங்களை பதம் பார்த்து வருகிறது.
இந்த சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும் என்று த.மா.கா., உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் துாத்துக்குடி வடக்கு மாவட்ட த.மா.கா., சார்பில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று போராட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட த.மா.கா., தலைவர் ராஜகோபால் தலைமையில், மாவட்ட துணை தலைவர் முத்துச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன். நகர பொருளாளர் செண்பகராஜ், நகர செயலாளர் சுப்புராஜ், நகர துணை தலைவர் மணிமாறன், வட்டார துணை தலைவர் செந்துார்பாண்டியன், வட்டார செயற்குழு உறுப்பினர் தங்கராஜ், நகர செயற்குழு உறுப்பினர் சரமாரி உள்ளிடோர் பாயை தலையில் வைத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தனர்.
கொண்டு வந்த பாயை விரித்து, அதில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், கோவில்பட்டி தாசில்தார் சரவணப்பெருமாளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டதில், சாலை போடப்படுவதற்கு திட்ட மதிப்பீடு செய்து கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளதால், அனுமதி பெற்றவுடன் சாலை போடும் பணி விரைந்து நடக்கும் என்றனர். அதைதொடர்ந்து, த.மா.கா.,வினர் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.