
ரேஷன் அரிசி கடத்தல் மோதல்: பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு – மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி நடவடிக்கை
கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் பின்னணியில் ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் முக்கிய குற்றவாளியான பாம்பு கார்த்திக் உட்பட 3 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த 23.04.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் பின்னணியில் ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கோவில்பட்டி செண்பகவல்லி நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்திக் ராஜா (எ) பாம்பு கார்த்திக் (29) என்பவர் உட்பட பல்வேறு நபர்களை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளில் 8 நபர்கள் ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கின் முக்கிய எதிரியான மேற்படி கார்த்திக் ராஜா (எ) பாம்பு கார்த்திக் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ்,
கடந்த 31.05.2024 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் புதுக்கோட்டை பிரகாஷ் நகரை சேர்ந்த ராமர் மகன் அழகுமுத்து (22) என்பவரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் அழகுமுத்து மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர்,
கடந்த 01.06.2024 அன்று தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மில்லர்புரம் பாரதிநகர் பகுதியில் ஒரு பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் ஜெபஸ்டின் (23) என்பவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் ஜெபஸ்டின் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் மீஹா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி கோவில்பட்டி செண்பகவல்லி நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் 1. கார்த்திக் ராஜா (எ) பாம்பு கார்த்திக், புதுக்கோட்டை பிரகாஷ் நகரை சேர்ந்த ராமர் மகன் 2. அழகுமுத்து, தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் 3. ஜெபஸ்டின் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மேற்படி 3 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போச்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேர், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 9 பேர் உட்பட மொத்தம் 92 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.