
திருச்செந்தூர்: யாசகம் பெற்று வந்த பெண்ணிற்கு சாலையோரத்தில் ஆண் குழந்தை பிறந்தது – உரிய நேரத்தில் மீட்டதால் தாயும், சேயும் நலம்
திருச்செந்தூரில் சாலையோரத்தில் யாசகம் பெற்று வந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. தாயையும், சேயையும் உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததால் நலமுடன் உள்ளனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சங்கர், ஹேமலதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரத்தில் வசித்து வருகின்றனர். சங்கர் குமாரபுரத்தில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் கடையில் வேலை செய்து வருகிறார். ஹேமலதா
திருச்செந்தூர் கோயில் பகுதியில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் ஹேமலதா நிறைமாத கர்ப்பிணியாக இறந்தார். இதற்கிடையே ஹேமலதா இன்று மதியம் வழக்கம்போல திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் டி.பி.ரோட்டில் ஓட்டல் தமிழ்நாடு எதிர்புறம் உள்ள சாலையோரத்தில் அமர்ந்து யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவர் அருகே இருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்தபோது கோயிலில் பணியாற்றும் தனியார் நிறுவன சூப்பர்வைசர் சரத் என்பவர் அந்த வழியாக சென்றுள்ளார். இதைப்பார்த்த அவர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கும், கோவில் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் உடன்குடியில் இருந்து வருவதற்கு தாமதமானதால் சாலை ஓரத்தில் ஹேமலதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து மனோகரன், மாரியம்மாள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தாய்க்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.