விவசாயிகள் வருமானம் 2022ல் இரு மடங்காகும்: பிரதமர் மோடி தகவல்
விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்படி விவசாயிகளிடம் கேட்டுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் வருமானம் 2022ம் ஆண்டில் இரு மடங்காக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார்.குஜராத் மாநிலம் போடட் அருகே 1,500 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சவுராஷ்டிரா நர்மதா அவதரன் லிங்க் 2ன், பேஸ் 1 நீர்ப்பாசன திட்டத்தை தொடங்கி வைத்தும், 1,694 கோடி இரண்டாம் கட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும் பிரதமர் மோடி பேசியதாவது:
மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்ததால், இந்தப் பகுதி விவசாயிகளின் கஷ்டம் என்ன என்று எனக்கு நன்றாகத் தெரியும். தண்ணீர் கடவுளுக்கு நிகரானது. அதனை வீணடிக்க நமக்கு உரிமை இல்லை. சவுராஷ்டிரா மண்டலத்தில் 115 அணைகளுக்கு இந்த திட்டம் தண்ணீர் பகிரும்.
சொட்டு நீர்ப்பாசனம் போன்ற நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட விவசாய முயற்சிகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்வோம் என்பதை இங்கு கூடியுள்ள மக்கள் பதினைந்து ஆண்டுகளுகு முன் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு வறட்சி தலைவிரித்தாடுகிறது. நாடு சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டை வரும் 2022ம் ஆண்டில் நாம் கொண்டாடும்போது, விவசாயிகள் வருமானம் இரண்டு மடங்காக உயரந்திருக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.தொழில்நுட்ப வசதிகள் பயன்பாடு, பால் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி பயன்பாடு, தேன் உற்பத்தி அதிகரிப்பது போன்றவற்றின் மூலம் விவசாயிகளின் வருமானம் கண்டிப்பாக இரு மடங்காகும். செல்போன்களில் விவசாயிகள் ‘பீம் ஆப்ஸ்’சை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான், மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களும், வங்கி சேவைகளும் செல்போனிலேயே உங்களுக்கு கிடைக்கும்.
சில்வாசா: போடட் நகரில் உரையாற்றி முடித்த பின்னர் சில்வாசா சென்ற மோடி, அங்கு பழங்குடி இனத்தவருக்கு நில உரிமை ஆவணங்கள் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கி பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில், ‘‘மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்து வரும் யூனியன் பிரதேசங்களில், பழங்குடி இனத்தினருக்கு நில உரிமை வழங்குவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்தது’’, என குற்றஞ்சாட்டி பேசினார்.கடந்த 35 ஆண்டுகளில் எந்த பிரதமரும் பயணித்திராத யூனியன் பிரதேசத்துக்கு விஜயம் செய்த முதல் பிரதமர் என்ற சிறப்பு எனக்கு இன்று கிடைத்துள்ளது. பழங்குடி இனத்தினருக்கு நில உரிமை வழங்குவதில் குஜராத்தும், மத்தியப் பிரதேச மாநிலமும் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால், குஜராத் முதல்வராக நான் அப்போது இருந்தபோது பழங்குடியினருக்கு எதுவும் செய்யவில்லை என என் மீது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பழி சுமத்தியது.
யூனியன் பிரதேசங்களில், ஒரே ஒரு பழங்குடி இனத்தவருக்குக் கூட நில உரிமையை முந்தைய காங்கிரஸ் அரசு வழங்கியிருக்கவில்லை என்பதை நான் பிரதமராக பொறுப்பேற்ற பின் தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். நிலத்தை உழும் உங்களில் 2,325 பேருக்கு முதன்முறையாக மத்திய அரசு நில உரிமை ஆவணம் இன்று வழங்கியுள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி பழங்குடியினர் அனைவருக்கும் வரும் 2022ம் ஆண்டுக்குள் வீடு கட்டித் தரப்படும்.