பசு கடத்தலில் ஈடுபட்டதாக அஸாமில் இருவர் அடித்துக் கொலை
அஸாம் மாநிலத்தில் பசுவைக் கடத்தியதாகக் கூறப்பட்ட இரு நபர்கள் உள்ளூர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
குவாஹாட்டியில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள கசோமோரி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாகப் பேசிய நாகன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேப்ராஜ் உபாத்யாய், ”அபு ஹானிஃபா மற்றும் ரியாஸுர்தீன் அலி என்ற இரு இளைஞர்களும் பசு கடத்தியதாகக் கூறப்பட்டு, கொல்லப்பட்டுள்ளனர். 20களின் ஆரம்பத்தில் இருந்த அவர்களை ஒரு கும்பல் அடித்தே கொன்றுள்ளது. பசுத் திருட்டு என்று கூறி, அஸாமில் இளைஞர்கள் கொல்லப்பட்டது இதுவே முதல்முறை.
சம்பவ இடத்தில் இருந்து தாக்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை எந்த வித பாகுபாடுமின்றி நடைபெறும்” என்றார்.
அஸாமில், ‘மாட்டிறைச்சிக்கு ஏதுவான பசு’ என்ற சான்றிதழ் தேவை. இல்லையெனில் மாட்டிறைச்சியை விற்கத் தடை உள்ளது. குறிப்பிட்ட சில முஸ்லிம் பண்டிகைகளின்போது மாட்டிறைச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அஸாமில் 2016-ல் பாஜக ஆட்சியைப் பிடித்தது.
பசு கடத்தியதாகக் கூறி, இருவர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அஸாம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.