அதிரடியாக விளையாடுவது மகிழ்ச்சி: ராகுல் திரிபாதி கருத்து
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ஈடன் கார்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 37, கிராண்ட்ஹோம் 36, சூர்ய குமார் யாதவ் 30 ரன்கள் எடுத்தனர். சுனில் நரேன் 0, கவுதம் காம்பீர் 24, ஷெல்டன் ஜேக்சன் 10, நாதன் கவுல்டர் 6, யூசுப் பதான் 4, கிறிஸ் வோக்ஸ் 1 ரன்கள் சேர்த்தனர்.
புனே அணி தரப்பில் உனத்கட், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா இரு விக்கெட்கள் கைப்பற்றினர். 156 ரன்கள் இலக்குடன் பேட் செய்த புனே அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க வீரரான ராகுல் திரிபாதி 52 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் விளாசினார். பென் ஸ்டோக்ஸ் 14, ரஹானே 11, ஸ்டீவ் ஸ்மித் 9, மனோஜ் திவாரி 8, தோனி 5, கிறிஸ்டின் 9, வாஷிங்டன் சுந்தர் 1 ரன் ரன் சேர்த்தனர்.
புனே அணிக்கு இது 7-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 14 புள்ளி களுடன் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. புனே அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சி உள்ளன. அதேவேளையில் கொல்கத்தா அணி 4-வது தோல் வியை சந்தித்தது. 11 ஆட்டத்தில் விளையாடி உள்ள அந்த அணி 14 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது.
ஆட்ட நாயகனாக ராகுல் திரிபாதி தேர்வானார். 26 வயதான அவர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர். அறிமுக வீரரான அவர் ரூ.10 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந் தார். இந்த சீசனில் திரிபாதி 9 ஆட்டங்களில் 2 அரைசதம் உட்பட 352 ரன்கள் குவித்துள்ளார்.
38 பவுண்டரிகள், 16 சிக்ஸர்கள் விளாசி உள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம் குறித்து அவர் கூறும்போது, “பெரிய அளவிலான ரசிகர்கள் கூட்டம் எனக்கு புதியது. என்னால் எதை செய்ய முடியுமோ அதில் அதிக கவனம் செலுத்துகிறேன். பந்தை சரியாக கவனித்து எனது பாணியில் அதிரடியாக விளையாடுகிறேன்.
நான் முன்னேற்றம் அடைய வேண்டிய பகுதிகள் உள்ளன என்பது எனக்கு தெரியும். ஆனால் நான் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறேன். சமீபத்தில் இருமுறை ஆறு பந்துகளில், 6 சிக்ஸர்கள் விளாசினேன். பந்துகளை அடித்து விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்ற ஆட்டம் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
புனே அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது, “கொல்கத்தா அணியை 160 ரன்களுக்குள் கட்டுப் படுத்தியது சிறப்பான விஷயம். திரிபாதி அருமையாக விளை யாடினார். எனினும் அவர் சதம் அடிக்க முடியாமல் போனது துரதிருஷ்டம் தான். சதம் அடிக்க திரிபாதி தகுதியானவர். இதே போன்று நாங்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்” என்றார்.
தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் கவுதம் காம்பீர் கூறும் போது, “பெரிய அளவிலான தொடரில் இதுபோன்ற தோல்வி நிகழவே செய்யும். பிளே ஆப் சுற்றுக்குள் நாங்கள் இன்னும் தகுதி பெறவில்லை. எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் சிறப்பாக செயல் பட்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்” என்றார்.