கோடநாடு எஸ்டேட்டில் வருமான வரி சோதனையா?
நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் உள்ள, ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில், வருமான வரி சோதனை நடந்ததாக, வெளியான தகவலால், நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க., முக்கிய புள்ளிகள் மற்றும் சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமான, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி வீடு, அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகளில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், கோத்தகிரியில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான, கோடநாடு எஸ்டேட்டில், ஏப்., 23ல், பலத்த காவலையும் மீறி, ஓம்பகதுார் என்ற காவலாளி, கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், சிலர் கைது செய்யப்பட்டனர்.
அங்கு, 200 கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கருதியே, கொள்ளை முயற்சி நடந்தது தெரிய வந்தது. இந்த தகவலால், வருமான வரித்துறை உஷாராகினர். எஸ்டேட்டில் சோதனை நடத்துவது பற்றி ஆலோசித்து வந்தனர். இந்நிலையில், அங்கு வருமான வரி சோதனை நடப்பதாக, நேற்று தகவல் பரவியது.
வருமான வரித்துறை அதிகாரிகளை கேட்டபோது, ‘அங்கு சோதனை எதுவும் நடக்கவில்லை’ என்றனர். ஆனாலும், விரைவில் சோதனை நடக்க வாய்ப்பு இருப்பதை, அவர்கள் மறுக்கவில்லை.
இதற்கிடையில், கோடநாடு எஸ்டேட் தொழிலாளர்கள் சிலர் கூறுகையில், ‘எஸ்டேட் மேலாளர் நடராஜன், குன்னுாரில் நடந்த தேயிலை வாரிய கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளார். இங்கு வேறு யாரும் வரவில்லை’ என்றனர்.
கோத்தகிரி போலீசார் கூறுகையில், ‘கொலை சம்பவத்தை தொடர்ந்து, கோடநாட்டில் கண்காணிப்பு பணி தொடர்கிறது. மற்றபடி, வருமான வரித்துறையினர் வருவது குறித்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை’ என்றனர்.