உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய ஆடவர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய ஆடவர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் அபிஷேக் வர்மா, சின்ன ராஜூ தர், அமன்ஜித் சிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி அரை இறுதியில் ரியோ வைல்டு, ஸ்டீவ் ஆன்டர்சன், பிராடன் ஜெலந்தியன் ஆகியோரை கொண்ட அமெரிக்க அணியை எதிர்த்து விளையாடியது.
மிகவும் பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 232-230 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 2-வது செட்டின் முடிவில் இந்திய அணி 116-117 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தது. ஆனால் 3-வது செட்டில் எழுச்சி பெற்று 60-57 என கைப்பற்றியது.
பின்னர் வெற்றியை தீர்மானித்த அடுத்த செட்டிலும் இந்திய வீரர்கள் அசத்தினர். தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி இறுதிப் போட்டியில் 10-வது இடத்தில் உள்ள கொலம்பியாவை இன்று எதிர்த்து விளையாடுகிறது.
அதேவேளையில் கலப்பு ஜோடி பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா இணை வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த ஜோடி அரை இறுதியில் 152-158 என்ற புள்ளிக் கணக்கில் கொரியா ஜோடி யிடம் தோல்வியடைந்தது. வெண் கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி இன்று அமெரிக்க ஜோடியுடன் மோதுகிறது.
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அதனு தாஸ், தீபிகா குமாரி ஆகியோர் ரீகர்வ் பிரிவில் தோல்வி யடைந்தனர். ஆடவர் பிரிவு கால் இறுதியில் அதனு தாஸ், அறிமுக வீரரான ஆலந்தின் ஸ்டீவ் விஜ்லெரிடம் வீழ்ந்தார். மகளிர் பிரிவில் தீபிகா குமாரி 1-7 என்ற கணக்கில் ஜப்பானின் ஹயகவா ரெனிடம் தோல்வி கண்டார்.
ரீகர்வ் கலப்பு ஜோடி பிரிவில் அதனு தாஸ், தீபிகா குமாரி ஜோடி கால் இறுதியுடன் வெளி யேறியது. இந்த சுற்றில் இந்திய ஜோடி 3-5 என்ற கணக்கில் ரஷ்ய ஜோடியிடம் தோல்வியடைந்தது.
ஆடவர் ரீகர்வ் பிரிவு கால் இறுதியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் ஜப்பானிடம் வீழ்ந்தது.