மத்திய குழு சென்னை வந்தது முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இன்று ஆலோசனை
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் வார்தா புயலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு சேதத்தை மதிப்பீடு செய்யும் 9 பேர் கொண்ட மத்திய குழு நேற்று சென்னைக்கு வந்தது.
தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இந்தக் குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர்.
கடந்த 12-ந் தேதியன்று வீசிய வார்தா புயல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
9 பேர் குழு
புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக 9 பேரைக் கொண்ட குழுவை மத்திய உள்துறை இணை செயலாளர் பிரவின் வசிஷ்டா தலைமையில் அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. அந்தக் குழுவில், மத்திய வேளாண்துறை இயக்குனர் (பொறுப்பு) கே.மனோசரண், நிதி துறை (செலவீனம்) உதவி இயக்குனர் ஆர்.பி.கவுல், குடிநீர் மற்றும் சுகாதார துறை சார்புச் செயலாளர் கே.நாராயணன் ரெட்டி, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மூத்த மண்டல இயக்குனர் டாக்டர் ரோஷினி ஆர்தர், மத்திய மின்சார ஆணைய துணை இயக்குனர் சுமித் குமார், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையின் சென்னை மண்டல அதிகாரி அரவிந்த், மத்திய ஊரக வளர்ச்சி துறை சார்புச் செயலாளர் திவாரி, மத்திய நீர் ஆணையத்தின் காவிரி மற்றும் தென் மண்டல ஆறுகள் இயக்குனர் (கண்காணிப்பு) ஆர்.அழகேசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பயணத் திட்டம்
அவர்களைக் கொண்ட மத்திய குழுவினர் 9 பேரும் நேற்று மாலை சென்னைக்கு வந்தனர். அவர்கள் சென்னையில் உள்ள தாஜ் கிளப் ஹவுசில் தங்கியுள்ளனர். அவர்களின் பயணத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
28-ந் தேதி (இன்று) காலை 9.30 மணிக்கு தாஜ் கிளப் ஹவுசில் இருந்து புறப்பட்டு தலைமைச் செயலகத்திற்கு வந்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை 10 மணி முதல் 10.30 மணிவரை சந்தித்துப் பேசுகின்றனர்.
10.30 மணி முதல் 11.30 மணிவரை மாநில அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். தலைமைச் செயலகத்தில் இருந்து 11.30 மணிக்கு புறப்படும் இந்தக் குழு, சென்னை மாநகராட்சிக்கு வருகை தருகிறது.
வண்டலூர் மிருககாட்சி சாலை
காலை 11.30 மணியில் இருந்து பிற்பகல் ஒரு மணி வரை பனகல் பார்க், அண்ணா வளைவு, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுகின்றனர்.
பிற்பகல் 2 மணிக்கு மேல் புறப்பட்டு கிண்டி (3 முதல், 4 மணி வரை), வண்டலூர் மிருககாட்சி சாலை (4.45 முதல் 5.15 மணி வரை), பல்லாவரம் (5.45 முதல் 6.30 வரை) ஆகிய இடங்களுக்கு செல்கின்றனர்.
நாளைய சுற்றுப்பயண விவரம்
நாளை (29-ந் தேதி), காலை 9 மணிக்கு ராயபுரத்துக்கு செல்கின்றனர். அங்கு 9.30 முதல் 10 மணிவரை பாதிக்கப்பட்ட மீன்வள உட்கட்டமைப்புகளை பார்வையிடுகின்றனர். பின்பு அங்குள்ள கள்ளுக்கடைமேட்டில் பாதிக்கப்பட்ட குடிசைகளை காலை 11.30 மணி முதல் மதியம் 12 மணிவரை பார்வையிடுகின்றனர்.
அங்கிருந்து வெள்ளோடைக்கு வந்து அங்கு பாதிக்கப்பட்ட குடிசைகளை பிற்பகல் 12.30 மணிவரை பார்வையிடுகின்றனர். பின்னர் சின்னாம்பேடுக்கு வந்து 12.45 மணி முதல் 1.15 மணிவரை பாதிக்கப்பட்ட தோட்டக்கலைப் பயிர்கள், வாழை, மாமரம் ஆகியவற்றை பார்வையிடுகின்றனர்.
தலைமைச் செயலாளருடன் சந்திப்பு
பின்னர் சோத்துப்பெரும்பேடு மற்றும் ஒரக்காடுக்கு சென்று பாதிக்கப்பட்ட விவசாய நிலம், நெற்பயிர்களை 2.30 மணி வரை பார்க்கின்றனர். அங்கிருந்து புறப்பட்டு அருமந்தைக்கு 2.45 மணிக்கு வந்து பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களை 3.30 மணிவரை பார்வையிடுகின்றனர்.
அங்கிருந்து சீமாவரம், பெரியமுல்லைவாயல், வழுத்கைமேடு, மதியூர் ஆகிய இடங்களுக்குச் சென்று 4.30 மணிவரை பாதிக்கப்பட்ட வயல் வெளியை பார்வையிடுகின்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு வருகின்றனர்.
தலைமைச் செயலகத்தில் மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் கலந்துரையாடுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.