மருத்துவ மேற்படிப்புக்கான கட்–ஆப் மதிப்பெண் குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் அனைத்து முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க ‘நீட்’ தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் இந்த ஆண்டு நடத்தியது. இதற்கு கட்–ஆப் மதிப்பெண், பொதுப்பிரிவினருக்கு 50 சதவீதமாகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 40 சதவீதமாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 45 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும், கட்–ஆப் மதிப்பெண்ணை போதிய மாணவர்கள் எடுக்காதபட்சத்தில், இந்திய மருத்துவ கவுன்சிலுடன் கலந்தாலோசித்து அந்த குறிப்பிட்ட கல்வி ஆண்டு மட்டும், கட்–ஆப் மதிப்பெண்ணை மத்திய அரசு குறைக்கலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் முதுநிலை மருத்துவ கல்வி ஒழுங்குமுறை விதிகள் கூறுகின்றன.
இந்த தேர்வில் போதிய மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை பெறாததால், சில பிரிவுகளில் இடங்கள் காலியாக இருக்கும் என்று சில மாநில அரசுகள் மத்திய அரசிடம் முறையிட்டன.
கட்–ஆப் குறைப்பு
இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சிலுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் கலந்தாலோசனை நடத்தியது. அதில், நடப்பு கல்வி ஆண்டில், மருத்துவ மேற்படிப்புக்கான கட்–ஆப் மதிப்பெண்ணை 7.5 சதவீதம் குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதனால், பொதுப்பிரிவினருக்கு 42.5 சதவீதமாகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 32.5 சதவீதமாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 37.5 சதவீதமாகவும் கட்–ஆப் மதிப்பெண் இருக்கும். இது, நடப்பு கல்வி ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த முடிவால், கூடுதலாக சுமார் 9 ஆயிரம் மாணவர்கள் பலன் அடைவார்கள்.