கருணை மதிப்பெண்கள் விவகாரம்; உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ சுப்ரீம் கோர்ட்டு செல்ல வாய்ப்பு
கருணை மதிப்பெண்கள் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ சுப்ரீம் கோர்ட்டு செல்லாம் என தெரியவந்து உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும் முறையை ரத்து செய்வதாக மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியதை அடுத்து விவகாரம் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு சென்றது. சிபிஎஸ்இ முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், கருணை மதிப்பெண் முறையை ரத்து செய்திருப்பது நியாயமற்ற, பொறுப்பற்ற நடவடிக்கை என கண்டனம் தெரிவித்தது.
இந்த முடிவு நடப்பாண்டே நடைமுறைக்கு வந்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பழையை முறையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தெளிவின்மை நீடிக்கிறது. இந்நிலையில் கருணை மதிப்பெண்கள் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ சுப்ரீம் கோர்ட்டு செல்லாம் என தெரியவந்து உள்ளது.
கருணை மதிப்பெண்கள் விவகாரத்தில் தன்னுடைய முடிவுகள் சரியானது என கூறும் சிபிஎஸ்இ உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளது என தகவல்கள் தெரிவித்து உள்ளன.
உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பாக நேற்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவதேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது இவ்விவகாரத்தில் அடுத்தக்கட்ட நகர்வுக்கு முன்னதாக சட்ட கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டது. “இவ்விவகாரத்தில் சட்ட ரீதியிலான தகவல்கள் கோரப்பட்டு உள்ளது, சிபிஎஸ்இ உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் மற்றும் இவ்விவகாரத்தில் அடுத்தக்கட்டமாக எடுக்கப்படும் முடிவுகள் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்,” என தகவல்கள் தெரிவித்து உள்ளன.