மான்செஸ்டர் பயங்கரவாதியின் இறுதி தொலைபேசி உரையாடல்
இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என தொலைபேசியில் கடைசியாக கூறியதாக, அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதி உரையாடல்:
மே 21ம் தேதி மான்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 59 பேர் காயமடைந்தனர். விசாரணையில், சல்மான் அமேதி, 22, என்ற இளைஞர் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. இந்நிலையில் குண்டுவெடிப்பை நடத்தும் முன், ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என தொலைபேசியில் சல்மான்அமேதி கூறியதாக, அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டு:
இதனிடையே தாக்குதல் தொடர்பான விசாரணை விவரங்களை, இங்கிலாந்து போலீசார், அமெரிக்க உளவுத் துறையிடம் பகிர்ந்து வந்தனர். அந்த விவரங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதனால் விசாரணைக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள இங்கிலாந்து போலீசார், இனிமேல் விசாரணை விவரங்களை அமெரிக்காவிடம் பகிர்ந்து கொள்ளமாட்டோம் என தெரிவித்துள்ளனர். இதுவரை மான்செஸ்டர் தற்கொலைப் படை தாக்குதல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.