
ஒரே தொகுதியில் மோதிக் கொள்ளும் மூன்று தலைவர்கள் – வெற்றி யாருக்கு ?.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி உடன்பாடுகளில் ஈடுபட்டு தனக்குரிய தொகுதிகளையும் கேட்டு பெற பேச்சு வார்த்தைகள் தொடங்கிவிட்ட நிலையில், அவரவர் கட்சி சார்ந்த தொண்டர்கள் பரபரப்பாகி வருகின்றனர். இந்த அரசியல் கால சூழ்நிலையில் தென்காசி பாராளுமன்ற தொகுதி தனித்தொகுதி அந்தஸ்த்தை பெற்று இருப்பதால் தலித் தலைவர்கள் மத்தியில் போட்டி வழுவாகி உள்ளது.
பா.ஜ.க கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இடம் பெற்று இருப்பதாக ஓர் தகவல் சொல்லப்படுகிறது. இந்த தகவலின்படி இந்த கூட்டணி கட்சி சார்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜாண் பாண்டியன் போட்டியிடுவதாகவும் தொண்டர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது. இந்த தொகுதியில் இவர் முதன் முதலாக தேர்தல் களத்தில் போட்டியிடுவதால் வெற்றி சார்ந்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இதைப் போலவே அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இனைந்து இத்தேர்தலை சந்திக்க தயாராகி வருவதாக மற்றொரு தகவல் வெளிப்படுத்தி வருகிறது. இது உண்மையானால் அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட போவதாகவும் ஓர் தகவல் பரபரப்பாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி இம்முறை வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு தேர்தல் களத்தை தயார்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இவர்களை தொடர்ந்து இந்த தொகுதியில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் மருதம் மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து தென்காசி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு வருவதாகவும் ஓர் தகவல் பரபரப்பாக சொல்லப்படுகிறது. இத்தகவல் உறுதியானால் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு தேவேந்திர குல கூட்டமைப்பு நிறுவன தலைவர் பசுபதி பாண்டியனின் மகள் சந்தணப்பிரியா போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவர் இந்த தொகுதியில் புதிய வேட்பாளர் என்றாலும் பசுபதி பாண்டியனின் மகள் என்ற அடையாளம் இவரது வெற்றியை ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தல் களத்திற்கு தயாராகி விட்டதாகவும் தகவல் சொல்லப்படுகிறது.
ஜாண் பாண்டியன், கிருஷ்ணசாமி, சத்தணப் பிரியா ஆகிய மூன்று நபர்களும் தென்காசி தொகுதியை குறிவைத்து தேர்தல் களம் காண்பதில் ஏதாவது உள்நோக்கம் ஒளிந்து கிடைக்கிறதா? என்று தேடி பார்த்தால் சாதிய பின்புலத்தை கட்டமைக்க இவர்கள் மேற்கொள்ளும் அரசியல் ராஜதந்திரமாகவே இவைகளை எல்லாம் பார்க்க தோன்றுகிறது. அதாவது ஆளும் திமுக-வை தோற்கடிக்க மூன்று தலைவர் பெருமக்களும் ஒரே தொகுதிக்குள் போட்டியிட விரும்புவது யாருக்கு எவ்வளவு மாஸ் இருக்கு என்பதை வெளிக் கொண்டுவரவும், மக்கள் செல்வாக்கை நிறுபிக்கவும் இவர்கள் மூவரும் ஒவ்வொருவரை எதிர்த்து குரல் கொடுக்க இயலாத நிலை ஏற்பாட்டுள்ளது. இந்த இயலாமை இவர்கள் நினைத்ததை போல திமுக-வை ஜெயிக்க வழி கொடுக்குமா? இவர்களில் ஒருவர் வெற்றி பெற தேர்தல் களம் வாய்ப்பை மாற்றுமா? என்பதும் கேள்வி குறியாக எழுந்துள்ளது.
மேலும், ஆதிதிராவிடர் இட ஒதுக்கீட்டில் இருந்து தேவேந்திர குல மக்களை பிரித்து வெளிக் கொண்டுவர ஜாண் பாண்டியன், கிருஷ்ணசாமி, பசுபதி பாண்டியன் தலைமையிலான மூன்று அமைப்புகளுமே மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்ற வேளையில் இவர்கள் மூவரும் தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவதை தேவேந்திரகுல மக்கள் ஏற்றுக்கொண்டு இவர்களை ஆதரிப்பார்களா? என்பதும் கேள்வியாக ஒலிக்கிறது. எது எப்படியோ இந்த தேர்தல் அமைதியாக முடிந்தால் போதும் என்கின்றனர் தொகுதி மக்கள்.!.