தென் மாநில மின்நுகர்வு: முதலிடத்தில் தமிழகம்
தென் மாநிலங்களின் மின் நுகர்வில், தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக, மத்திய மின் துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு, நடப்பாண்டில் ஒவ்வொரு மாநிலங்களிலும், மின் நுகர்வு எவ்வளவு; எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பது உள்ளிட்ட விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தென் மாநிலங்களில், தமிழகம், 10 ஆயிரத்து, 910 கோடி யூனிட் மின்சாரத்துடன், மின் நுகர்வில் முதலிடத்தில் உள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தென் மாநிலங்களில், ஆந்திராவில் தான், மின் தேவை அதிகம் இருந்தது; அந்த மாநிலத்தில் இருந்து, தெலுங்கானாவை தனி
மாநிலமாக பிரித்த பின், தமிழகம் முதலிடத்திற்கு வந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வரை, வட மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், கடுமையான மின் பற்றாக்குறை நிலவியது.தேசிய மின் தொகுப்புடன், தென் மாநில மின் தொகுப்பை இணைத்தது முதல், தென் மாநிலங்களுக்கு, அதிகளவில் மின்சாரம் கிடைக்கிறது.
தமிழகத்தில், நடப்பாண்டு முழுவதும் மின் நுகர்வு, 10 ஆயிரத்து, 910 கோடி யூனிட்களாகவும், கிடைக்கும் மின்சாரத்தின் அளவு, 11 ஆயிரத்து, 777 கோடி யூனிட்களாக இருக்கும் என, மத்திய மின் துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.