‘கேசினோ’வில் துப்பாக்கி சூடு – பிலிப்பைன்சில் 36 பேர் பலி
பிலிப்பைன்சில், பொழுதுபோக்கு மையத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர், தனக்கு தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவத்தின் போது வெளியான நச்சுப் புகையை சுவாசித்த, 36 பேர் பலியாகினர்.
தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் மணிலாவில், சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே, ‘கேசினோ’ எனப்படும், பொழுதுபோக்கு மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு, இந்த மையத்திற்குள் புகுந்த, முகமூடி அணிந்திருந்த மர்ம நபர், திடீரென துப்பாக்கியால் சுட்டான். எனினும், மக்கள் மீது குறி வைக்காமல், அங்கிருந்த, ‘டிவி’, கண்ணாடி கதவுகள் மீது சுட்டான். துப்பாக்கி சத்தம் கேட்ட வாடிக்கையாளர்கள், அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
இந்த நெரிசலில் சிக்கி, பலர் படுகாயம் அடைந்தனர். பொழுதுபோக்கு மையத்தின் மேல்தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த, வாயுக்கலன் மீது, துப்பாக்கி குண்டு பட்டு, அதிலிருந்து நச்சுப் புகை கிளம்பியது.புகையை சுவாசித்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, 36 பேர் பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர், பொழுது போக்கு மையத்தில் இருந்த தரை விரிப்பை தன் மீது போர்த்தி, அதன் மீது பெட்ரோலை ஊற்றி, தனக்கு தானே தீ வைத்து உடல் கருகி இறந்தான்.
இந்த சம்பவம் குறித்து, அந்நாட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எனினும், இந்த சம்பவத்திற்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.