
சேவைக் குறைபாடு : 15,000 ரூபாய் இழப்பீட்டை தொலைக்காட்சி பழுது பார்ப்பவர் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி காலனியைச் சார்ந்த கனகராஜ் என்பவர் தூத்துக்குடி டுவிபுரத்திலுள்ள தொலைக்காட்சி பழுது பார்க்கும் கடைக்காரரிடம் தனது தொலைக் காட்சியில் எல்.ஐ.டி. ஸ்கிரீனில் பிரச்சினை இருப்பதாகவும், அந்த பழுதை சரி செய்து தருமாறும் கேட்டுள்ளார். அதற்கு ரூபாய் 4000 செலவாகும் எனக் கூறி கடைக்காரர் அந்த தொகையை உடனே பெற்றுள்ளார். ஆனால் பல மாதங்களாகியும் பழுது நீக்கித் தராமல் காலம் தாழ்த்தியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கனகராஜ் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஐ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் பழுதான தொலைக்காட்சியில் எல்.ஐ.டி. ஸ்கிரீனில் உள்ள பழுதை நீக்கி ஒப்படைக்க வேண்டும் என்றும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 10,000 மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூபாய் 5,000 ஆகியவற்றை இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.