
செய்துங்கநல்லூர் அருகே வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை – இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி அருகே உள்ள பத்மநாதபுரத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் ஐயப்பன் என்ற சுரேஷ்(27). இவர் செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மரிய லூசியா என்ற மனைவி உள்ளார்.
இன்று மதியம் 1 மணியளவில் செய்துங்கநல்லூரில் பொருட்கள் வாங்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள சத்தக்காரன்பட்டி இசக்கியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே பைக்கில் வந்த 2பேர் கொண்ட மர்ம கும்பல் இவரை தடுத்து நிறுத்தியுள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட ஐயப்பன் தனது இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.
ஆனால் அவரை விடாமல் துரத்திய 2 பேரும் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் ஐயப்பனுக்கு தலை, கழுத்து, கைகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஐயப்பன் உயிரிழந்தார். உடனே அவரை வெட்டிய அந்த 2பேரும் அங்கிருந்து தப்பியோடினர்.
இதுகுறித்து அந்த வழியாக வந்த பொதுமக்கள் செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார், ஐயப்பன் என்ற சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடிபோதையில் இருந்தவரை தட்டிக் கேட்டதால் இந்த கொலை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக செய்துங்கநல்லூர், அய்யனார்குளம் பட்டி சாலையில் உள்ள கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கூலித்தொழிலாளி வேலைக்கு சென்று திரும்பும் போது அவரை வழிமறித்து ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி: திருச்செந்தூர் சதீஷ்