மகளிர் குழுக்களுக்கு ரூ.8,000 கோடி கடன்
”ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், நடப்பாண்டில், 6,332 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்,” என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
சட்டசபையில், 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
• தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 800 கோடி ரூபாய் மதிப்பில், 3,500 கி.மீ.,
நீளமுள்ள, ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்
• பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 2,659 கி.மீ., நீளமுள்ள, ஊரக சாலைகள் மற்றும், 25 உயர்மட்டப் பாலங்கள், 1,254 கோடி ரூபாய்
செலவில் மேம்படுத்தப்படும்
• மகளிர் சுய உதவி குழுவினர், தங்களின் உற்பத்தி பொருட்களை கண்காட்சி நடத்தி விற்க, ஊராட்சி அளவில், 1,000 இடங்களில், கூட்டமைப்பு கட்டடங்கள், 600 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்
• ‘துாய்மை பாரதம்’ இயக்கம் மற்றும் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், 26.49 லட்சம் தனிநபர் இல்லக் கழிப்பறைகள், தலா, 12 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையில், 3,178 கோடி ரூபாயில் கட்டப்படும்
• மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் அருகேயுள்ள, கிராம ஊராட்சிகளுக்கும், மலை பிரதேசங்களில் அமைந்துள்ள, கிராம ஊராட்சிகளுக்கும், அதிக மக்கள்தொகை உடைய, பெரிய கிராம ஊராட்சிகளுக்கும், 200 கோடி ரூபாயில், குப்பைத் தொட்டிகள்; 100 கோடி ரூபாயில், மூன்றுசக்கர சைக்கிள், தள்ளுவண்டிகள்; 200 கோடி ரூபாயில், மின் மோட்டார் மூலம் இயக்கப்படும் தள்ளுவண்டிகள் வழங்கப்படும்
• மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, 7,000 கோடி ரூபாய், வங்கிக் கடன் வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.