Breaking News
மின்சார அளவை துல்லியமாக அறிய துணை மின் நிலையத்தில் நவீன கருவி

அவசர காலத்தின் போது நிறுத்தப்படும் மின்சார அளவை துல்லியமாக தெரிந்து கொள்ள, கிராமங்களில் உள்ள துணை மின் நிலையங்களில், ‘ரிமோட் டெர்மினல் யூனிட்’ என்ற நவீன கருவியை பொருத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

மின் உற்பத்தி, மின் தேவை ஒரே அளவில் இருக்கும் போது, மின் கட்டமைப்பின் அதிர்வெண், 50, ‘ஹெர்ட்ஸ்’ என்றளவில் இருக்கும். அப்போது, எந்த பிரச்னையும் ஏற்படாது. மின் தேவை அதிகரித்து, உற்பத்தி குறையும் போது, அதிர்வெண் அளவு குறையும். அந்த சமயத்தில், மின் வழித்
தடத்தை ஒழுங்குப்படுத்த, துணை மின் நிலையங்களில், தானாகவே மின் சப்ளை நிறுத்தப்படும்.
இதனால், மின் உற்பத்திக்கு ஏற்ப, மின் தேவையும் குறைக்கப்படுவதால், கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படாது. அவ்வாறு செய்யும் போது, துணை மின் நிலையங்களில் நிறுத்தப்படும் மின்சாரத்தின் அளவை, துல்லியமாக கண்டறிய, அவற்றில், ஆர்.டி.யூ., என்ற கருவி பொருத்தப்படுகிறது.
முதல் முறையாக, கிராமங்களில் உள்ள, 110 கிலோவோல்ட் திறன் துணை மின் நிலையங்களில், ஆர்.டி.யூ., கருவியை, மின் வாரியம் பொருத்த உள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் உற்பத்தி, மின் தேவை ஒரே சீராக இல்லை எனில், மின் வழித்தட கட்டமைப்பில் பழுது ஏற்படும். அதை தவிர்க்க, துணை மின் நிலையங்களில், முன்னெச்சரிக்கைக்காக மின் சப்ளை நிறுத்தப்படும். அப்போது, எவ்வளவு மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்ற விபரத்தை, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள, மத்திய மின் பகிர்ந்தளிப்பு மையத்துக்கு தெரிவிக்க வேண்டும். தற்போது, உத்தேச அடிப்படையில் விபரம் தெரிவிக்கப்படுகிறது.துல்லிய அளவை கண்டறிய, துணை மின் நிலையங்களில், ஆர்.டி.யூ., என்ற கருவி பொருத்தப்படும். அதில், ‘சிம் கார்டு’ இருக்கும். இதன்மூலம், மின் சப்ளை துண்டிக்கும் போது, அதன் அளவு அதில் பதிவாகும். அந்த விபரம், சென்னையில் உள்ள, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் வாயிலாக, மத்திய மையத்திடம் தெரிவிக்கப்படும்.
தற்போது, மின் வாரியத்தின், 400, 230 கிலோவோல்ட் திறன் துணை மின் நிலையங்களில், ஆர்.டி.யூ., கருவி உள்ளது. முதல் முறையாக, தர்மபுரி, வேலுார் உட்பட, பல மாவட்டங்களில், 29 கிராமங்களில் உள்ள, 110 கி.வோ., திறன் துணை மின் நிலையங்களில், ஆர்.டி.யூ., கருவி பொருத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.