கதிராமங்கலத்தில் கைதான 9 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி செயல்பாட்டுக்கு எதிரான போராட் டத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தஞ்சாவூர் நீதிமன்றத்தால் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள கதிரா மங்கலத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி நடைபெற்ற பொதுமக்களின் போராட்டத்தையடுத்து, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், கும்பகோணம் க.விடு தலைச்சுடர், கதிராமங்கலம் கா.தர்மராஜ், வெங்கட்ராமன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களில் பேராசிரியர் ஜெய ராமன் உள்ளிட்ட 9 பேரின் ஜாமீன் மனுக்கள், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நக்கீரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன.
சுமுக நிலை ஏற்படவில்லை
அப்போது, அரசு வழக்கறிஞர் குப்புசாமி, “கதிராமங்கலத்தில் சுமுக நிலை ஏற்படவில்லை. தாக்கப்பட்ட போலீஸாரும் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை விடு வித்தால், பதற்றம் அதிகரிக்கும்” என்றார்.
குற்றம்சாட்டப்பட்டோர் தரப் பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நல்லதுரை, சிவசுப்பிரமணியன் ஆகியோர், “ஜனநாயக முறை யில் அமைதியாக போராடிய இவர் கள் மீது பொய் வழக்கு போடப் பட்டுள்ளது. எனவே, இவர்களை விடுவிக்க வேண்டும்” என்றனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் 10-வது நபரான வெங்கட்ராமனின் ஜாமீன் மனு இன்று (ஜூலை 5) விசாரணைக்கு வருகிறது.