Breaking News
பேட்ஸ்மேன்கள் சொதப்பல்; இந்தியா தோல்வி

நான்காவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் வேகத்தில் அசத்த, அந்த அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இந்தியா 2-0 என முன்னிலை வகித்திருந்தது. இந்நிலையில் நான்காவது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது.

இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. யுவராஜ் சிங், அஷ்வின், புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக், ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எவின் லீவிஸ், கைல் ஹோப் ஜோடி நிதானமான துவக்கம் தந்தது. இவர்கள், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்த போது ஹர்த்திக் பாண்ட்யா பந்தில் கைல் ஹோப் (35) அவுட்டானார்.

உமேஷ் யாதவ், ரவிந்திர ஜடேஜா பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய எவின் லீவிஸ் (35), குல்தீப் யாதவ் ‘சுழலில்’ சிக்கினார். அடுத்து வந்த ராஸ்டன் சேஸ் (24), குல்தீப் பந்தில் போல்டானார். ஹர்த்திக் பாண்ட்யா ‘வேகத்தில்’ ஷாய் ஹோப் (25) வெளி யேறினார். கேப்டன் ஹோல்டர் (11) நிலைக்கவில்லை.

ஜேசன் முகமது (20) பாண்ட்யா வேகத்தில் சிக்கினார். பிஷோ (15) ஜடேனாவின் துல்லிய த்ரோவால் ரன்அவுட்டாகி வெளியாறினார். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா தலா 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் தவான்(5), கேப்டன் கோஹ்லி (3) மற்றும் தினேஷ் கார்த்திக்(2) சொதப்ப, 47 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. பின் தோனியுடன் இணைந்த மற்றொரு துவக்க வீரர் ரகானே(60) அரைசதம் விளாசினார். பிஷோ சுழலில் ரகானே வெளியேற மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. ஜாதவ்(10), பாண்ட்யா(20), ஜடேஜா(11) விரைவில் பெவிலியன் திரும்பினர்.

மற்றொரு முனையில் பொறுப்புடன் விளையாடிய தோனி அரைசதம் விளாசினார். 49 ஓவரில் தோனியும் (54) அவுட்டாக இந்தியாவின் தோல்வி உறுதியானது. கடைசி ஓவரில் உமேஷ் யாதவ், ஷமி இருவரும் ஹோல்டர் வேகத்தில் சிக்கினர். இந்திய அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் எடுத்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் 5 விக்கெட் கைபற்றி அசத்தினார். 5 போட்டிகளை கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.