Breaking News
மின்சாரம் தாக்கி சிறுமிகள் பலியான சம்பவம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீசு

சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர், ராஜரத்தினம் நகர் பகுதியில் உள்ள குடிசைமாற்றுவாரிய குடியிருப்பு ‘பி’ பிளாக்கில் வசித்து வருபவர் பார்த்திபன். இவருடைய மனைவி அனு. இவர்களுடைய மகள் பாவனா(வயது 7). இவள், அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

அதே அடுக்குமாடி குடியிருப்பு ‘டி’ பிளாக்கை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகள் யுவஸ்ரீ(9). இவளும், அதே பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.

மழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சிறுமிகள் இருவரும் வீட்டில் இருந்தனர்.

நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழையால் அந்தப் பகுதியில் உள்ள தெருக்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது.

ராஜரத்தினம் நகர் தெருவில் உள்ள ஒரு மின்சார பெட்டியில் இருந்து மற்றொரு மின்சார பெட்டிக்கு தரை வழியாக மின்சார வயர் செல்கிறது. மண்ணில் புதைக்கப்படாமல் கிடந்த அந்த மின்வயர் சேதம் அடைந்து இருந்தது.

தெருவில் தேங்கி நின்ற மழைநீரில் அந்த மின்வயரும் மூழ்கி கிடந்ததால் அதில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருந்தது.

இதை அறியாமல் சிறுமிகள் பாவனா, யுவஸ்ரீ இருவரும் தெருவில் நேற்று மதியம் விளையாடியபடியே அருகில் உள்ள கடைக்கு நேற்று சென்றனர்.

அப்போது சிறுமிகள் இருவரும் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருந்த மழைநீரில் எதிர்பாராதவிதமாக கால் வைத்தனர். அப்போது இருவரையும் மின்சாரம் தாக்கியது. அலறி அடித்தபடி இருவரும் சரிந்து விழுந்தனர்.

சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சிறுமிகளை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமிகள் பாவனா, யுவஸ்ரீ இருவரும் மின்சாரம் தாக்கி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘சிறுமிகள் உயிரிழப்பு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.