Breaking News
சென்னையில் 3.75 டி.எம்.சி., நீர் கடலில் கலந்தது: மழைநீர் வீண்

வட கிழக்கு பருவமழையால் கிடைத்த மழைநீர், கூவம், அடையாறு ஆறுகள் மூலம், கடந்த இரண்டு தினங்களில் மட்டும், 3.75 டி.எம்.சி., அளவிற்கு, கடலில் கலந்து வீணாகியுள்ளது.

அதே நேரத்தில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், 20 சதவீதம் கூட தண்ணீர் நிரம்பவில்லை. போதிய கட்டமைப்பு வசதிகளை, தமிழக அரசு செய்யாததால், ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வீணாவது தொடர்கதையாக உள்ளது.
தமிழகத்தில், கடந்த, 26ம் தேதி, வட கிழக்கு பருவமழை துவங்கியது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் ஆகிய மாவட்டங்களில், 29ம் தேதி இரவு முதல், தொடர் மழை பெய்து வருகிறது. இதில், சிறிய நீர்நிலைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகின்றன.
குடியிருப்புக்களில் போதிய மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், மழைநீர், வடிகால்கள் மற்றும் கால்வாய்கள் மூலம், கூவம், அடையாறு ஆறுகள் வழியாக, கடலில் கலந்து வருகின்றன.இந்த வகையில், கடந்த இரண்டு தினங்களாக, சென்னையின்
முக்கிய நீர்வழிதடங்களான கூவத்தில், வினாடிக்கு, 6,500 கன அடியும், அடையாறு ஆற்றில், 14 ஆயிரம் கன அடியும், பக்கிங்ஹாம் கால்வாயில், 1,400 கன அடி நீரும், கடலுக்கு சென்றது.
விருகம்பாக்கம் கால்வாயில், 600 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது; இந்த நீர், கூவத்தில் கலக்கிறது. ஓட்டேரி நல்லாவில், 700 கன அடி நீர் ஓடிக் கொண்டிருக்கிறது; இது, பக்கிங்ஹாம் கால்வாயில்கலக்கிறது. ஒட்டுமொத்தமாக, கடந்த இரண்டு தினங்களாக, கூவம், அடையாறு, பக்கிங் ஹாம் கால்வாய் ஆகிய மூன்று நீர்வழித்தடங்கள் மூலம், 21 ஆயிரத்து, 900 கன அடி நீர் வீதம், கடலுக்கு சென்று கொண்டுஇருக்கிறது.
இந்த வகையில், கடந்த, 48 மணி நேரத்தில் 3.75 டி.எம்.சி., மழைநீர், வீணாக கடலில் கலந்து உள்ளது.அதே நேரத்தில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளிலும் சேர்த்து, மொத்தம், 20 சதவீதம் அளவிற்கு கூட நீர் நிரம்ப வில்லை.இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு, 11 டி.எம்.சி., ஆகும். ஆனால், நேற்று மாலை வரை, 2 டி.எம்.சி., அளவிற்கு மட்டுமே நீர் நிரம்பியுள்ளது.
பூண்டி ஏரியில், 349 மில்லியன் கன அடி, சோழவரம் ஏரியில், 22.5 கோடி கன அடி; புழல் ஏரியில். 67.2 கோடி கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில், 67.9 கோடி கன அடி நீர் இருப்புஉள்ளது.குடிநீர் ஏரிகளும் நிரம்பாமல், பாசனத்திற்கும், நிலத்தடி நீர் ஆதாரத்திற்கும் உதவும் சிறிய ஏரிகளும், இன்னும், 80 சதவீதம் அளவிற்கு நிரம்பாத நிலையே, தற்போது வரை உள்ளது.
இன்னும் பெருமழை பெய்தால் தான் குடிநீர் ஏரிகளும், இதர நீர்நிலைகளும் முழுமையாக
நிரம்பும்.ஆனால், கிடைக்கும் மழைநீரை சேமிக்க, தமிழக அரசு முறையான கட்டமைப்பு வசதிகளை செய்யாததால், இரண்டு நாள் மழைக்கே, 3.75 டி.எம்.சி., மழைநீர் வீணாகி உள்ள நிலையில், வட கிழக்கு பருவமழை முடிவதற்குள், இன்னும் நாம், இழக்க போகும் மழைநீர், பல டி.எம்.சி., என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

 

கணக்கிடுவது எப்படி

* பொதுப்பணித்துறை எடுத்த கணக்கெடுப்பு படி, கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் வழியாக, வினாடிக்கு, 21 ஆயிரத்து, 900 கன அடி நீர் கடலுக்கு செல்கிறது.
* ஒரு மணி நேரத்திற்கு, 3,600 வினாடிகள். இரண்டு நாட்கள், அதாவது, 48 மணி நேரத்திற்கு, ஒரு லட்சத்து, 72 ஆயிரத்து, 800 வினாடிகள். இந்த காலகட்டத்தில், கடலை நோக்கி பாய்ந்த நீரின் அளவு, 378 கோடியே, 43 லட்சத்து, 20 ஆயிரம் கன அடியாகும்.அதாவது, 3,784 மில்லியன் கன அடி நீர் கடலில் கலந்து உள்ளது என, கணக்கிடப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.