தமிழகம் முழுவதும் ‘தலாக்’ சான்றிதழ் வழங்க ஹாஜியார்களுக்கு தடை
சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. பதர் சயீத் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
பெண்களுக்கு எதிரானது
முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் திருமணமான ஆண்கள் 3 முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது. ஹாஜியார்கள் தலாக் சான்று வழங்கி விட்டால் அதுவே இறுதி முடிவு என எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது மட்டுமின்றி தன்னிச்சையானது ஆகும்.
அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது, உரிமைகளையும் பாதுகாப்பது அரசின் கடமையாகும். இதில் எந்த ஒரு பாரபட்சமும் காட்டக்கூடாது. முஸ்லிம் ஆண்கள் 3 முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வதால், முஸ்லிம் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
நீதிமன்றத்துக்கு அதிகாரம்
எந்த ஒரு நிபந்தனைகள், விதிமுறைகளை பின்பற்றாமலும், ஒரு தலைபட்சமாகவும், தன்னிச்சையாகவும் முஸ்லிம் பெண்களை, ஆண்கள் விவாகரத்து செய்கின்றனர். மனைவிகளுக்கு தெரியாமலும் பல ஆண்கள் தலாக் சொல்லி விவாகரத்து செய்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளில், அவர்களுக்கு ஹாஜியார்களும் விவாகரத்து சான்றிதழ்களை வழங்குகின்றனர்.
ஒரு காலத்தில் விவாகரத்து வழங்கும் அதிகாரம் அந்த ஹாஜியார்களுக்கு வழங்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், அந்த அதிகாரம் நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டது.
இதன்பின்னர் திருமணத்தை பதிவு செய்யும் அதிகாரம் மட்டுமே ஹாஜியார்களுக்கு உள்ளது.
உரிமை இல்லை
எனவே, தலாக் சொல்லி விவாகரத்து பெறும் முறையை ரத்து செய்யவேண்டும். தலாக் சான்றிதழ் வழங்குவதற்கு தமிழகத்தில் உள்ள ஹாஜியார்களுக்கு தடைவிதிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
1880-ம் ஆண்டு ஹாஜியார்கள் சட்டம், பிரிவு 4-ல் ஹாஜிக்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்பது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி நீதிபரிபாலனம் செய்யும் உரிமை ஹாஜியார்களுக்கு இல்லை.
தலாக் சான்றிதழுக்கு தடை
தலாக் விசயத்தில் ஹாஜியார்கள் தரக்கூடிய சான்றிதழ் என்பது எந்த விதத்திலும் சட்டரீதியான ஆவணம் கிடையாது. அந்த சான்று ஹாஜியார்களின் தனிப்பட்ட கருத்து என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எனவே இந்த வழக்கு முடியும் வரை தமிழகம் முழுவதும் உள்ள ஹாஜியார்கள், தலாக் சான்று வழங்கக்கூடாது. தலாக் சான்று வழங்க ஹாஜியார்களுக்கு தடை விதிக்கிறோம். அதுபோல, ஹாஜியார்கள் தரக்கூடிய தலாக் சான்றிதழை ஒரு சட்ட ரீதியிலான விவாகரத்து ஆவணமாக கீழ் கோர்ட்டுகள் எடுத்துக் கொள்ளக்கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவேண்டும் என்று ஐகோர்ட்டு பதிவாளருக்கு உத்தரவிடுகிறோம். இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 21-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நன்றி : தினத்தந்தி