
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகன் – வள்ளியம்மன் திருக்கல்யாணம் நாளை (24ம்தேதி) நடைபெறுகிறது
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை (24ம் தேதி) நடக்கிறது. இதனை முன்னிட்டு இக்கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாரதனை நடக்கிறது. அதிகாலை 5:00 மணிக்கு வள்ளியம்மன் சப்பரத்தில் எழுந்தருளி தபசு காட்சிககு முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோயில் சென்று சேருகிறார். அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனை ஆனதும் சுவாமி குமரவிடங்க பெருமான் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோயில் வந்து வள்ளியம்மனுக்கு காட்சியளிக்கிறார். தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு கீழரதவீதி முகப்பில் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளியம்மன் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 9:00 மணிக்கு கோயில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமான் – வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் பக்தர்கள் மொய் எழுதி வழிப்படுகின்றனர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, விபூதி குங்குமம் அடங்கிய பிரசாதம் வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் மற்றும் இணை ஆணையர் கார்த்திக் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.