Breaking News
ஜல்லிக்கட்டு நடத்த உடனடியாக அவசர சட்டம் மத்திய அரசுக்கு, சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு நடத்தாததற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்று அவதூறு குற்றச்சாட்டு கூறப்படுவதாகவும், ஜல்லிக்கட்டு நடத்த உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் மத்திய அரசை சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தாததற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 11–7–2011 அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை தான் காரணம் என்று தமிழக பா.ஜ.க.வினர் காங்கிரஸ் கட்சி மீது அவதூறு குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறிவருகின்றனர்.

2011 அறிவிக்கைக்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு ஆணையின் உதவியோடு 2012, 2013, 2014–ம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதை தமிழக பா.ஜ.க.வினர் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல தந்திரமாக மூடி மறைத்து பேசி வருகிறார்கள். இது அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாதமாகும்.

உண்மையிலேயே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என விரும்பினால் அதற்குரிய சட்டரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திருக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மக்களை மத்திய பா.ஜ.க. அரசு ஏமாற்றியதைப் போல இந்த ஆண்டும் ஏமாற்றியிருக்கிறது.

அவசர சட்டம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இன்னும் ஒருசில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும். தமிழக காங்கிரஸ் கட்சி மீது பழிபோடுகிற பா.ஜ.க.வினர் தேசிய தலைமையை வலியுறுத்தி அவசர சட்டம் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.

அப்படி மத்திய பா.ஜ.க. அரசு தயாராக இல்லையெனில் கடந்த தி.மு.க. ஆட்சியில் 2009–ம் ஆண்டு கொண்டு வந்ததைப் போல தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தைப் போல மீண்டும் ஒரு வலிமையான சட்டத்தை கொண்டு வந்து அன்று ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்தியதைப் போல மீண்டும் நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இத்தகைய முயற்சிகளை செய்ய மத்திய பா.ஜ.க. அரசும், தமிழக அ.தி.மு.க. அரசும் முன்வரவில்லை எனில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தாததற்கு அவர்களே முழுப்பொறுப்பேற்க நேரிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.