
வெள்ள நிவாரணத்தை தமிழ்நாடு அரசு பார்த்துக் கொள்ளும்… உச்ச நீதிமன்றம் அதிரடி
புயல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு ரூ.8,000 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் வீசிய மிக்ஜாம் புயல் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் சுவடு மறையும் முன்பாக, அடுத்த சில தினங்களிலேயே தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் புயல் மற்றும் மழையால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டு உள்ளதை குறிப்பிட்டு ₹8,000 கோடி நிவாரணம் வழங்கவும், அதில் ₹3,000 கோடியை இடைக்கால நிவாரணமாக உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
தென்மாவட்ட வெள்ளம்
இதை விசாரித்த உச்சநீதிமன்றம் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், ‘தமிழ்நாடு அரசுக்கு பிரச்சினை இருந்தால் அவர்கள் முறையிடுவார்கள். இது அரசின் நிர்வாகம் சம்மந்தப்பட்டது.
நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். புயல், மழை போன்ற விவகாரங்களை தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ளும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த மனுவை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை’ என நீதிபதிகள் கூறியுள்ளனர்.