ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கும் வகையில் அவசர சட்டம் வெளியிட வேண்டும் பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கும் வகையில் அவசர சட்டத்தை வெளியிட வேண்டும் என்று பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
சிலப்பதிகாரத்தில் ஜல்லிக்கட்டு
சங்க காலத்தில் இருந்தே தமிழகத்தின் கலாசார பாரம்பரியத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு ஆழமாக கலந்துள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மற்றும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, பழங்கால தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகளை யாரும் உடல் ரீதியாக துன்புறுத்துவது இல்லை.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைவிதித்து கடந்த 7.5.14 அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்தியா முழுவதும் காளைகளை காட்சிப்படுத்தும் விலங்காக ஜல்லிக்கட்டு விளையாட்டிலோ, மாட்டுவண்டி பந்தயத்திலோ பயன்படுத்த முடியாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக 2009–ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட மாநில சட்டத்தையும் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துவிட்டது.
மக்களுக்கு ஆத்திரம்
தமிழக மக்களிடையே மதம் மற்றும் கலாசார ரீதியான தொடர்புடைய விளையாட்டு என்பதால் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடை உத்தரவு, தமிழகமெங்கும் குறிப்பாக ஊரகப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உங்களுக்கு கடிதம் எழுதி, ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கும்படி கேட்டுக்கொண்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
2016–ம் ஆண்டு ஜனவரியில் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அதனடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 7.1.16 அன்று அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டது.
இது இரண்டாம் ஆண்டு
ஆனால் அந்த அறிவிப்பாணைக்கு 12.1.16 அன்று சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடைவிதித்ததால், தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டாக 2016–ம் ஆண்டிலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த முடியாமல் போய்விட்டது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு 19.5.14 அன்று தாக்கல் செய்த மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் 16.11.16 அன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜல்லிக்கட்டின் பாரம்பரியத்தை குறிப்பிட்டும், 7.1.16 அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பாணையை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதோடு, காளைகளுக்கு வலி ஏற்படாமல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான திட்டத்தையும் தமிழக அரசு வகுத்தளித்தது. அந்த வழக்கில் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.
2 கருத்துகள்
14.6.16 அன்று ஜெயலலிதா கொடுத்த மனுவிலும், 19.12.16 அன்று நான் கொடுத்த மனுவிலும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்று, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 2011–ம் ஆண்டு ஜூலை 11–ந் தேதியன்று பிறப்பித்த அறிவிப்பாணையில் காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள காளையின் பெயரை நீக்கவேண்டும்.
இரண்டாவது, விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத்தின் 11(3)ம் பிரிவில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டியை நீக்கும் வகையில் ‘எப்’ என்ற ஒரு புதிய ஷரத்தைச் சேர்க்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த கருத்தின் அடிப்படையில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
சட்டப்பூர்வமான தடைகள்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர ஒருவாரத்துக்கும் குறைவான நாட்கள்தான் உள்ளது. எனவே, இந்த அவசர சூழ்நிலையைக் கருதி, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிராக உள்ள சட்டப்பூர்வமான தடைகளை நீக்கும் வகையில் அவசர சட்டத்தை வெளியிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
மக்களின் உணர்வுகளோடு கலந்துள்ள இந்த விளையாட்டை நடத்துவதற்கு மத்திய அரசு ஆதரவளிக்கும் வகையில் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த அவசர சட்டத்தை வெளியிடுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு தகுந்த அறிவுரையை நீங்கள் வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினத்தந்தி