
கனிமொழியின் வெற்றிக்கு எதிர் கட்சிகள் மறைமுக ஆதரவா.?.
ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதிக்கு திமுக வேட்பாளராக மீண்டும் கனிமொழி களம் இறங்குகிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இதே கனிமொழிக்கு நிகரான வேட்பாளரை எதிர்கட்சிகள் நிறுத்தவில்லை. இதனால் கனிமொழியின் வெற்றியை எதிர் கட்சிகளால் தடுக்க முடியவில்லை. ஆகவே இந்த தேர்தலில் கனிமொழிக்கு நிகரான வேட்பாளரை பா.ஜ.க நிறுத்தும் என்பதை அக்கட்சியை சார்ந்தவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், தொடக்கத்தில் சசிகலா புஷ்பா போட்டியிட போவதாக தகவல் வெளியானது. அதன்பிறகு விவேகம் ரமேஷ் பெயரும், மாவட்ட செயலாளர் சித்ராங்கதன் பெயரும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், திமுக-வினர் அண்ணாமலைக்கு சவால் விட்டனர். கனிமொழியை எதிர்த்து அண்ணாமலை போட்டியிட தயாரா? என்றனர்.
இதன்பிறகு ச.ம.க தலைவர் சரத்குமார் பா.ஜ.க-வில் இணைந்தது தூத்துக்குடி தொகுதியில் சரத்குமார் போட்டியிட தயாராகிவிட்டதாக தகவல் பரவியது. தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி நாடார் வாக்குகளை நம்பி களமிறங்குகிறார்கள் அதனால் வெற்றி நிச்சயம் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் சரத்குமாரை பா.ஜ.க களமிறக்க திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க-வினர் தரப்பில் கூறப்பட்டது. அதன் பிறகு ராதிகா சரத்குமாரை நிறுத்தப் போவதாக தகவல் பரவியது.
இதற்கிடையில் திமுகவினரின் சவாலை ஏற்று கனிமொழியை எதிர்த்து அண்ணாமலை போட்டியிடுவார் என்றும் பா.ஜ.கவினர் தரப்பில் தகவல் பரவி வந்ததால் திமுகவினர் மத்தியில் ஓர் பதட்டம் நிலவியது. கனிமொழி தோற்கடிக்கப்பட்டால் இரண்டு அமைச்சர்கள் பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தை பா.ஜ.க உருவாக்கியது.
ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக தூத்துக்குடி தொகுதியை த.ம.காவுக்கு பா.ஜ.க ஒதுக்கியதால், இதுவரை நிலவி வந்த பதட்டம் தனித்து விட்டது. ஏற்கனவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக-விடம் த.மா.கா தோல்வி அடைந்ததை மனதில் கொள்ளாமல் மீண்டும் இந்த தொகுதியை த.மா.கா-வுக்கு பா.ஜ.க ஒதுக்கியது கனிமொழியின் வெற்றிக்கு ( ரகசிய உறவை ) மறைமுக ஆதரவை பா.ஜ.க கொடுக்கிறதோ!. என்ற சந்தேகம் தொகுதி முழுவதும் ஓர் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
கனிமொழியின் வெற்றிக்கு பா.ஜ.க தான் தடை போடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை தருவதாக பா.ஜ.க-வினர் குற்றம் சுமத்துகின்றனர். அதைப்போலவே அதிமுக வேட்பாளரும் கனிமொழியின் வெற்றியை முறியடிக்க கூடிய பலம் வாய்ந்த வேட்பாளராக சிவசாமி வேலுமணியாவது இருப்பாரா? என்ற சந்தேகத்தை தான் கொடுக்கிறது மூத்த அரசியல்வாதிகள். மொத்தத்தில் பா.ஜ.க.வும், அதிமுகவும் சேர்ந்து தூத்துக்குடி தொகுதியை கனிமொழிக்கு விட்டுக் கொடுக்கிறதா? என்ற கேள்வி அரசியல் கட்சிகளிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..
எது எப்படியானாலும் தூத்துக்குடி தொகுதியில் எதிர்கட்சிகளின் மறைமுக ஆதரவோடு கனிமொழி 5 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்று மகிழ்ச்சியில் கூறுகின்றனர் திமுக-வினர்.