
நாடாளுமன்றத் தேர்தலில் மீனவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய அதிமுகவுக்கு தேசிய மீனவர் கட்சி (N.I.S.H.A.D) ஆதரவு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேசிய மீனவர் கட்சி (N.I.S.H.A.D) மாநில தலைவர் வழக்கறிஞர் சிவராஜ் தலைமையில், நேரில் சந்தித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் மூன்று நாடாளுமன்ற தொகுதியில் மீனவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் குரலற்ற மீனவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் அளித்த அதிமுக கட்சிக்கு தார்மீக ஆதரவு தெரிவிப்பதாகவும், தமிழக முழுவதும் அதிமுகவுக்கு ஆதரவாக மீனவர்களிடம் பிரச்சாரம் செய்து, மீனவர்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ள அதிமுகவின் வெற்றிக்கு பக்கபலமாக இருப்போம் என தெரிவித்து ஆதரவு கடிதம் கொடுத்தனர்.
இதில், தமிழ்நாட்டில் கடற்கரை மற்றும் உள்நாட்டில் 60 லட்சம் மீனவர்கள் 15 இனக்குழுக்களாக வாழ்கிறோம். கடல் தாயின் மைந்தர்களாகிய மீனவர்களுக்கு கடல் நீர்மட்டம் உயர்வு, சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் மற்றும் கச்சத்தீவு மீன்பிடி பிரச்சனை போன்றவற்றை பாராளுமன்றத்தில் பேச முறையான பிரதிநிதித்துவம் இதுவரை இல்லை.
கடந்த 75 ஆண்டுகளாக முறையான பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவம் மீனவர்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தென்சென்னை தொகுதியில் ஜெயவர்த்தனுக்கு வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்தார்.
அதேபோல தற்போது தாங்கள் தமிழ்நாட்டில் தென்சென்னை ஜெயவர்த்தன் மற்றும் கன்னியாகுமரி பசலியான் பாராளுமன்ற தொகுதிகளில் மீனவர்களுக்கு வாய்ப்பளித்து உள்ளீர்கள். அதேபோல பாண்டிச்சேரியிலும் தமிழ்வேந்தன் இந்தமுறை மீனவர்களுக்கு வாய்ப்பளித்து உள்ளீர்கள்.
மொத்தத்தில் அதிமுக சார்பில் மீனவர்களுக்கு 3 பாராளுமன்ற தொகுதிகள் கொடுத்து மீனவர்களுக்கு முறையான அரசியல் அங்கீகாரம் அளித்துள்ளார்.
எனவே தேசிய மீனவர் கட்சி ( N.I.S.H.A.D) கடலூர் செயற்குழுவில் எடுத்த முடிவின்படி, மீனவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சிக்கு ஆதரவளித்து, தமிழகம் முழுவதும் ஆதரவு பிரச்சாரம் செய்வது என முடிவு செய்துள்ளோம்.
அதனடிப்படையில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 3 பாராளுமன்ற தொகுதிகளில் மீனவர்களுக்கு வாய்ப்பளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி-க்கும், அதிமுக தலைமை கழகத்துக்கும் தேசிய மீனவர் கட்சி (N.I.S.H.A.D) சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே சமயம் மீனவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கும் என்று கட்சி முடிவின்படி, தமிழகம் முழுவதும் கூட்டணி அமைத்து அதிமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம் செய்வது என முடிவு செய்துள்ளோம் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மீனவர்களை பழங்குடி பட்டியலில் இணைக்க ஜெயலலிதா பல்வேறு முயற்சிகளை எடுத்தார், தற்போது அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, மீனவர்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க ஆவன செய்யவேண்டும். மேலும் மீனவர்களுக்கு தனி தொகுதி, மீனவர் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் அவரிடம் முன்வைக்கப்பட்டது.
இதனை அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்றத் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நன்றியுடன் ஏற்று கொண்டு மீனவர்களுக்கு என்றும் அதிமுக அரணாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்வில், தேசிய மீனவர் கட்சி ( N.I.S.H.A.D) பொதுச்செயலாளர் சேனாதிபதி சின்னத்தம்பி, அரசியல் ஆலோசகர் கனகசபை, மாநில செயலாளர்கள் தங்கம், ஜெபராஜ், கடலூர் மாவட்ட தலைவர் செல்வஏழுமலை, செயலாளர் உதயகுமார், முருகானந்தன் மற்றும் ரஞ்சித் பெர்ணான்டோ உடன் இருந்தனர்.