
ரூ.500க்கு சிலிண்டர் தருவதாக கூறும் திமுகவின் தேர்தல் அறிக்கை காமெடியாக இல்லையா? உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா? இதை மத்திய அரசு தான் கொடுக்க முடியும் – திருச்செந்தூர் நயினார் நாகேந்திரன் பேட்டி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டி சத்ருசம்ஹார பூஜை மற்றும் சிறப்பு யாகம் நடத்தி திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வழிபாடு செய்தார். அப்போது திமுக எப்போதும் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என அவர் விமர்சனம் செய்தார.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். அப்போது சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் எதிரிகளை வெல்ல கூடிய சத்ருசம்ஹார பூஜை மற்றும் யாகம் நடத்தினார். மேலும் அபிஷேகம், திரிசதை அர்ச்சனை செய்து அவர் வழிப்பட்டார்.
பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
400 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று நாட்டில் நல்லாட்சி செய்து வரும் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என பூஜை செய்து வழிபட்டோம்.
திமுகவிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. நாட்டில் நல்லது எதுவும் நடந்து விடக்கூடாது என்பது அவர்களது எண்ணம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க முடியும். தனிமனிதர்களோ, கனிமொழியோ முடிவு செய்ய முடியாது.
திமுகவின் தேர்தல் அறிக்கை காமெடியாக இல்லையா? உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா? ரூ.500க்கு சிலிண்டர் தருவதாக கூறுகிறார்கள். இதை மத்திய அரசு தான் கொடுக்க முடியும். ஏற்கனவே சிலிண்டருக்கு ரூ. 200 குறைப்பதாக சொன்னார்கள். அதை அவர்கள் செய்தார்களா?
கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தேய்த்து தேய்த்து கட்டெறும்பாகி விட்டது. 40 எம்பிகள் மட்டுமே அவர்கள் உள்ளனர். கடந்த தேர்தல் அறிக்கையில் அனைத்து பெண்களுக்குப் ரூ. 1000 தருவதாக சொன்னார்கள். அதன் பிறகு குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்றார்கள்.
திமுக எப்போதும் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. பிரதமர் மோடி தான் சொல்லாதததையும் செய்வார்.
ஜனநாயக நாட்டில் யாரையும் விமர்சிக்க உரிமை உண்டு. அது நாகரீகமான முறையில் இருந்தால் எல்லோருக்கும் நல்லது.
அதிமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தான் சொல்லி இருக்கிறார்கள். மத்திய அரசு தான் ஏற்கனவே அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கிறார்கள். ரூ 5 லட்சத்திற்கு மருத்துவ இன்சூரன்ஸ் கொடுக்கப்படுகிறது. இப்படி மத்திய அரசு தான் செய்யமுடியும்.
ஜெயலலிதாவிற்கு பிறகு அரசியலில் சிறிய இடைவெளி எனக்கு ஏற்பட்டது. அதன்பிறகு பிரதமர் மோடி செயல்பாடுகள் பிடித்தது.
ஜாபர் சாதிக் என்பவர் போதை கடத்தலில் ரூ. 2500 கோடி கிடைத்துள்ளது. இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை பார்க்க வேண்டும். போதை பொருட்கள் கடத்தலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆணவம் என்ற வார்த்தையை பயன்படுத்தியவர்கள் ஆணவகாரர்கள்.
யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறாக அவர் கூறினார்.