நாடு முழுவதும் ரேஷன் கடைகளில்: மானிய விலை பொருட்களை வாங்க ஆதார் எண் கட்டாயமாகிறது
நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் மானிய விலை உணவுப்பொருட்களை வாங்கு வதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் (என்எப்எஸ்ஏ) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன்படி ஆண்டுக்கு ரூ.1.4 லட்சம் கோடி மானியம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ உணவுப்பொருள் ரூ.1 முதல் ரூ.3 வரையிலான விலையில் வழங்கப்படுகிறது. இதன்மூலம் சுமார் 80 கோடி பேர் பயனடைகிறார்கள்.
இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆதார் சட்டத்தின்படி உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை கடந்த 8-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ரேஷன் கார்டு வைத்திருப்போர் மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதுவரை ஆதார் எண் பெறாதவர்கள், மானிய விலை உணவுப்பொருட்களைத் தொடர்ந்து பெற விரும்பினால் ஜூன் 30-ம் தேதிக்குள் ஆதார் பதிவு மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எனினும், ஜூன் 30-ம் தேதிக்குப் பிறகு ஆதார் எண் இல்லாதவர்களுக்கு மானிய விலை உணவுப் பொருட்கள் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கவில்லை. மாறாக, ரேஷன் கார்டுடன், ஆதார் எண் வழங்கக் கோரி விண்ணப்பம் செய்ததற்கான ஆவண நகல் மற்றும் இதர அரசு அடையாள அட்டைகளில் ஒன்றையும் ரேஷன் கடைகளில் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 8 விதமான ஆவணங்களில் ஒன்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
நன்றி : தி இந்து தமிழ்