
நெல்லை ரயிலில் பா.ஜ.க. பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல் – நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதா.?.
சென்னை எழும்பூரில் இருந்து நேற்றிரவு 8.10 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்நிலையில், இந்த ரயிலில் நெல்லைக்கு பல கோடி ரூபாய் பணம் கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர் சாதன பெட்டியில் நடத்திய அதிரடி சோதனையில் 6 பைகளில் கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து, பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கைதானவர்கள் புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளர் சதீஷ், அவரது சகோதரர் நவீன், விடுதி லாரி ஓட்டுநரான ஸ்ரீவைகுண்டம் பதியைச் சேர்ந்த பெருமாள் ஆகிய 3 பேர், மேலும் அந்த பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக செல்லப்பட்டதாக போலீசார் விசாரணையில் பிடிபட்ட மூன்று பேரும் தெரிவித்ததாக போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், 10 லட்சத்திற்கும் மேலாக பணம் உள்ளதால் வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.