அரசியல் கட்சிகளுக்கு பணம் பரிமாற்றம்- தூத்துக்குடி பிரபல தொழிலதிபர் வீட்டை சுற்றி வலைத்த பறக்கும் படையினர்
தூத்துக்குடி மட்டக்கடை அருகே உள்ள வடக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கிறிஸ்டோபர் வீட்டில் இருந்து பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பறக்கும் படை சார்பில் காவல்துறையினர் சோதனை செய்ய வீட்டின் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மட்டகடை அருகே உள்ள வடக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். தொழிலதிபரான இவர் பல ஆண்டுகளாக பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டிலிருந்து அரசியல் கட்சிகளுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்படுவதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து நேற்று காலை அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு சுமார் 10 மணி முதல் அவரது வீட்டு முன்பு பணம் பரிமாற்றம் எதுவும் நடைபெறுகிறதா என்பதை சோதனை செய்யுவும், கண்காணிக்கவும் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வீட்டின் முன்புறமும், பின்புறமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் தொழிலதிபர் வீட்டில் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.