
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 266 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நாளை 19ந்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் பயன்படுத்தபடும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதி தலைமையிடத்தில் பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, விளாத்திக்குளம் மற்றும் கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி இன்று நடந்தது.
இதில் திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிரு;நத அறை சீல் உடைக்கப்பட்டு, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்டிஓவுமான சுகுமாறன், அரசியல் கட்சியினர் முன்னிலையில் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நிலைய அலுவலரிடம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவிற்கான பொருட்களை ஒப்படைத்தார். இதையடுத்து 215 திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 266 வாக்குச்சாவடி மையங்களுக்கு 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அவை போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்த்ராஜ், தாசில்தார் பாலசுந்தரம், ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன், துணை தாசில்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்படி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 266 வாக்குச்சாவடிகளில் 1317 வாக்குச்சாவடி பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 35 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அவைகளில் மைக்ரோ அப்சர்வகள் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் 175 வாக்குப்பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமரா வசதியும் செய்யப்பட்டுள்ளது.