
விவசாயிகளுக்கு உயிர் உரங்களின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு
ராமநாதபுரம் – மே: 24
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி ஜே. ஆனி ஹிங்கிஸ், நொச்சி ஊரணி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு விவசாயக் கூட்டம் அமைத்து “ரைசோபியம் விதை நேர்த்தி” குறித்து விளக்கமளித்தார்.
பயிர் வகைகளுக்கு ரைசோபியம் உயிர் உரத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்வது பற்றிய செயல்முறையும் அதன் நன்மைகள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது. வேளாண் குடிமக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய ரைசோபியம் என்ற நுண்ணுயிர் காற்றில் இருக்கும் தழைச்சத்தை சேகரித்து நிலத்தை வளப்படுத்தி பயிர்களுக்கு நன்மை வகிக்கின்றது. இந்த ரைசோபியம் நுண்ணுயிர் பெரும்பாலும் பயறுவகைச் செடிகளுடைய வேர்முடிச்சுகளில் தான் அதிகம் காணப்படுகிறது.
தொடர்ந்து பயறு வகைகள் பயிரிட்டு வரும் நிலங்களில் இதன் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். பயறு வகைகளை விதைக்கும் போது சோதனைக் கூடத்தில் பெருக்கப்பட்ட ரைசோபியத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைத்த ரைசோபியத்தினுடைய எண்ணிக்கையை நிலத்தில் அதிகமாக்கி அதிக தழைச்சத்தை காற்றில் இருந்து கிரகித்த நிலத்தின் வளத்தை மேம்படுத்துவதுடன் நல்ல விளைச்சலையும் பெறலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சிறு குறு விவசாயிகள் முதலானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.