
போலீஸ்காரர் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற போலீஸ்காரர் கைது – ஆயுதப்படை குடியிருப்பில் பரபரப்பு
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருவளக்குறிச்சியை சேர்ந்தவர் மனோகரன் மகன் பிரபாகரன் (31). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்துள்ளார். பிரபாகரன் கடந்த 12ஆம் தேதி பணி முடிந்து இரவு மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள மற்றொரு முதல் நிலை போலீஸ்காரர் ஒருவரின் மனைவி தனது வீட்டின் முன்பு படிக்கட்டில் நின்றபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதை கண்ட பிரபாகரன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்யும் நோக்கில் வாயை பொத்தி மேல் தளத்திற்கு தூக்கிச் சென்றுள்ளார். இதில் சுதாரித்து கொண்ட அந்த பெண் அவரிடம் இருந்து தப்பிச்சென்று, நடந்ததை தனது கணவரிடம் கண்ணீர் மல்க கதறி கூறியுள்ளார். இதையடுத்து ஆயுதப்படையில் குடியிருக்கும் சக போலீஸ்காரர்கள் பிரபாகரனை தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இதுத்தொடர்பாக பாதிக்கப்பட்ட போலீஸ்காரரின் மனைவி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ்காரர் பிரபாகர் மீது 354, 354 ஏ, 509, தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடை சட்டப் பிரிவு ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர், அவர் பெரம்பலூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்1 நீதிபதி சுப்புலட்சுமி முன்பு ஆஜரானார். பிரபாகரனை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
பிரபாகரன் 2 மாதங்களுக்கு முன்புதான் இடம் மாறுதலாகி பெரம்பலூருக்கு வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, போலீஸ்காரர் பிரபாகரனை பணி நீக்கம் செய்ய மாவட்ட எஸ்பி சியாமளா தேவி நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த சம்பவம் பெரம்பலூர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.