
காவல்துறை உயர் அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் இழிவாக பேசிய சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் டெல்லியில் கைது.!.
காவல்துறை உயர் அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் இழிவாக பேசிய வழக்கில் கோவை சைபர் கிரைம போலீசார் அரசியல் விமர்சகர் சங்கரை தேனியில் வைத்து கைது செய்தனர்.
அப்போது அவருடன் இருந்த ராஜரத்தினம் மற்றும் கார் டிரைவர் ஆகியோரை கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் சவுக்கு சங்கர் மீதும் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சவுக்கு சங்கருக்கு மே 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் சென்னை மாநகர காவல் துறையினரால் மேலும் இரண்டு வழக்கில் கைது செய்யப்பட்டார்
நேற்று அவரை சென்னை மாநகர் போலீசார் அழைத்து வந்த நிலையில் தேனி மாவட்ட போலீசார் மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு ற்றும் சென்னை தியாகராயநகரில் செயல்பட்டு வரும் அலுவலகத்திலும் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் சவுக்கு சங்கர் வீட்டில் இருந்து கஞ்சா செல்போன் லேப்டாப் 2 லட்சம் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்ததோடு அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்தனர்.
இந்நிலையில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூப் சேனல் மீது கோவை போலசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
ஏற்கெனவே அரசியலில் இருக்கும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் ஜாமீனில் வந்த நிலையில், தற்போது மீண்டும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் பெலிக்ஸை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
இதனையடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸை டெல்லியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவரை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.