Breaking News
நடுவானத்தில் பறந்தபோது ‘ஹெலிகாப்டரில் இருந்து ஒருவரை தள்ளி கொன்றேன்; ஊழல் அரசு ஊழியரை அது போல கொல்வேன்’

நடுவானத்தில் பறந்தபோது ஹெலிகாப்டரில் இருந்து ஒருவரை தள்ளி கொலைசெய்ததாகவும், ஊழல் அரசு ஊழியரை அதேபோல் கொலை செய்வேன் என்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நீண்டகால மேயர்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர் ரோட்ரிகோ துதர்தே. வக்கீலான இவர் தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் தவாவே நகரின் மேயராக பணியாற்றி உள்ளார்.
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டவர்.

அந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கும் வெளிநாட்டவர்கள், உள்நாட்டவர்கள் என அனைவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றி வருகிறார்.

அதிபருக்கு எச்சரிக்கை

அவரது இந்த மரண தண்டனை நடவடிக்கைக்கு ஐ.நா. அமைப்பும், சர்வதேச நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, அவரை கடுமையாக விமர்சித்தும் வருகின்றன. ஆனால் ரோட்ரிகோ யாருக்கும் செவிசாய்ப்பதாக இல்லை.

இந்த நிலையில், கடந்த வாரம் ரோட்ரிகோ தான் மேயராக இருந்த காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பலரை படுகொலை செய்திருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர்களில் சிலரை சட்டப்படியும், சிலரை சட்டவிரோதமாகவும் கொலை செய்ததாகவும் அவர் கூறினார்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ரோட்ரிகோ பதவி நீக்க குற்ற விசாரணையை சந்திக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

ஹெலிகாப்டரில் இருந்து…

இந்த நிலையில், கடந்த 27-ந்தேதி புயலால் பாதிக்கப்பட்டவர்களை ரோட்ரிகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசினார்.

அவர் பேசியதாவது:-

நான் ஒரு முறை, கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்ட சீனாவை சேர்ந்த ஒருவரை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அவரை கீழே தள்ளி கொலை செய்தேன்.
அரசு ஊழியர் ஊழல்வாதியாக இருந்தால், அவரை நான் ஹெலிகாப்டரில் மணிலாவுக்கு அழைத்து செல்வேன். பின்னர் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது கீழே தள்ளிவிடுவேன். நான் இதற்கு முன் அதனை செய்திருக்கிறேன். நான் ஏன் அதை மறுபடியும் செய்யக்கூடாது?

நானே சுட்டுக்கொல்வேன்

கடந்த வாரம் மணிலாவில் நடந்த சோதனையின் போது அரை டன் எடை கொண்ட போதை பொருள் வைத்திருந்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் அப்போது நான் மணிலாவில் இல்லை.
யாரிடமாவது போதை பொருள் இருக்கிறது என எனக்கு தெரியவந்தால் கண்டிப்பாக அவர்களை கொல்வேன். எந்த நாடகமும் நடத்த மாட்டேன். நானே சுட்டுக்கொல்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இருப்பினும் ஹெலிகாப்டரில் இருந்து ஒருவரை தள்ளி கொலை செய்ததாக சொல்லிய சம்பவம் எங்கே எப்போது நடந்தது என்பது குறித்து ரோட்ரிகோ குறிப்பிடவில்லை

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.