Breaking News
2016ன் டாப்10 டி20 பேட்ஸ்மென் இவர்கள்தான்!

டி20! கிரிக்கெட் விளையாட்டின் ஸ்டார் ஃபார்மெட்! அடித்து ஆடு அல்லது அவுட் ஆகு என்பதுதான் டி20 கிரிக்கெட்டின் பாலிசி. மூன்றரை மணி நேர ஆட்டம் தான், ஆனால் ஓவருக்கு ஓவர் எகிறும் சஸ்பென்ஸ் காரணமாக டி20 கிரிக்கெட்டுக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றார்கள். ஆறு பந்துகள் உங்கள் வாழ்க்கையை மாற்றிப் போடலாம்.

ஒரே ஒரு கேட்ச், ஒரே ஒரு விக்கெட், ஒரே ஒரு சிக்ஸர், ஒருவரை உலகின் மூலை முடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்க்கும் என்றால் எந்த கிரிக்கெட் வீரனுக்குத் தான் டி20 கிரிக்கெட் ஆட ஆசை வராது? ஜென் Z க்கு கிரிக்கெட்னா டி20 தான். சினிமாவை போல, சூதாட்டத்தை போல, ஷேர் மார்க்கெட்டைப்போல ஓவர் நைட்டில் உலகப்புகழ் பெரும் பாக்கியம் டி20 பேட்ஸ்மேன்களுக்குத் தான் கிடைக்கிறது. இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அசத்திய பேட்ஸ்மேன்கள் யார் யார்?

10. மசகட்சா:-

சமீப வருடங்களில் ஐ.சி.சி டாப் 10 வரிசைக்குள் வந்திருக்கும் ஒரே ஜிம்பாப்வே வீரர் மசகட்சா தான். தொடக்க வீரராக களமிறங்கி அடிக்க வேண்டிய பந்துகளை விளாசி, அணிக்குத் தேவையான போது பொறுமையாகவும் விளையாடி ஜிம்பாப்வே அணிக்கு தொடர்ந்து நம்பிக்கை அளித்தார் மசகட்சா. இந்த ஆண்டு மட்டும் மூன்று அரை சதம் அடித்திருக்கிறார். வங்கதேசத்துடனான ஒரு போட்டியில் 58 பந்தில் 93 ரன் வெளுத்து நாட் அவுட்டாக இருந்தார். சதம் மிஸ்ஸாயிருச்சுன்னு போட்டி முடிந்தபிறகு வருத்தப்பட்டார் இவர்.

அடுத்த வருஷம் அடிச்சுடலாம்!

masakadza

9. ரோஹித் ஷர்மா:-

விராட் கோஹ்லியை விட டேஞ்சரான பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா. அவரை விரைவில் அவுட்டாக்கியே ஆக வேண்டும் என ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித். இந்த ஆண்டின் துவக்கத்தில் ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலிய அணியை புரட்டி எடுத்தார், வங்கதேச அணியை ஆசியக் கோப்பையில் போட்டுப் பொளந்தார். ஆனால் உலகக்கோப்பை தொடரில் வரிசையாக சொதப்பிக் கொண்டிருந்தார் ரோஹித் ஷர்மா, விமர்சனங்கள் எழுந்த வேளையில் முக்கியமான அரையிறுதியில் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் போது, 43 ரன்னில் அவுட் ஆனார் ரோஹித். அந்த இன்னிங்ஸில் இன்னும் கொஞ்ச நேரம் அவர் ஆடியிருக்கலாமே என்பது தான் இந்திய ரசிர்களின் வருத்தம். எனினும் இந்த ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் இருக்கும் இரண்டு இந்தியர்களில் இவரும் ஒருவர்.

மீண்டு எழுந்து வா!

rohit
8. ஜேசன் ராய்: –

இங்கிலாந்து அணிக்கு இந்த ஆண்டு கிடைத்த சரவெடி ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜேசன் ராய். மும்பையில் தென் ஆப்பிரிக்க அணி 228 ரன்களை குவிக்க, பதிலடியாக இவர் முதல் ஓவரில் இருந்தே சிக்ஸர் மழை பொழிய அங்கே தான் உத்வேகம் பெற்றது இங்கிலாந்து அணி. உலகக்கோப்பையில் அத்தனை அணிகளையும் நியூசிலாந்து கதறவிட்டுக் கொண்டிருந்தது. இந்தியா உட்பட அத்தனை அணிகளையும் வென்று ஒரு போட்டியில் கூட தோற்காத அணி என வளைய வந்தது. அரையிறுதி போட்டி சுழலுக்குச் சாதகமான டெல்லி மைதானத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 153 ரன்களை குவிக்க, நியூசிலாந்தின் மூன்று சூழல் பந்து வீச்சாளர்களையும் பாரபட்சம் பார்க்காமலே வெளுத்துக்கட்டி 44 பந்தில் 78 ரன்கள் குவித்து ஒன்மேன் ஆர்மியாக இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார் ஜேசன் ராய்.

அடிச்சு ஆடு!

jason roy in t20
7.முகமது ஷஷாத்:-

இந்தாண்டு டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருப்பவர் யார் தெரியுமா முகமது ஷஷாத். ஃபிட்னெஸ் இல்லாமல் பார்க்க தொப்பையும் தொந்தியுமாக இருக்கும் இவர், எதிரணி பவுலர்களை எடுத்த எடுப்பிலேயே பவுண்டரி விளாசி வரவேற்கிறார். நம்மூர் சேவாக் போல எல்லா பந்தையும் எல்லைக்கோட்டுக்கு விரட்டுவதையே வேலையாக வைத்திருக்கிறார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இவர் இந்த ஆண்டு சதமடித்திருக்கிறார் இந்த ஆஃப்கானிஸ்தான் அதிரடிக்காரர்.

நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும், ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் இவர் தான் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 19 பந்தில் மூன்று பவுண்டரி, ஐந்து சிக்ஸர் எடுத்து 44 ரன்கள் குவித்தார். ரபாடா, அபாட், மோரிஸ் என எல்லோரையும் உரித்தவர், மேட்ச் முடிந்த பிறகு, ‘ஸ்டெயின் ஏன் பாஸ் வரல? அவர் பந்தில் சிக்ஸர் அடிக்கணும்கிறது தான் என் ஆசை’ என ஜாலியாக சொன்னார்.

இவர் ஆப்கான் ஷேவாக்!

shashad in t20
6.ஜோ ரூட்:-

உலகக்கோப்பை டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக, இங்கிலாந்து வீரர் ரூட் எடுத்த அதிரடி அரை சதம் அமர்க்களம். மும்பை வான்கடே மைதானத்தில் அன்று அவர் வெளுத்ததில் தென் ஆப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவுகள் சில நிமிடங்களில் கலைந்தன. இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இவர் அடித்த அரை சதம் இங்கிலாந்தை கவுரமான ஸ்கோர் குவிக்க உதவியது. ஒருவேளை பிராத்வெயிட் அந்த நான்கு பந்துகள் மேஜிக்கை நிகழ்த்தியிருக்காவிட்டால் ரூட் தான் உலகக் கோப்பை நாயகனாக மிளிர்ந்திருப்பார்.

இவரை வாழ்த்துங்கள் பிரெண்ட்ச்!

root
5. ஹாசிம் ஆம்லா: –

டக்கென ஜெர்க் அடித்துவிடாதீர்கள். பதற்றப்படாமல் படியுங்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட சுமாரான ஆட்டத்தை ஆடிய சவுத் ஆஃப்ரிக்கா சிங்கம் ஆம்லா இந்த ஆண்டு டி 20 கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டம் காட்டினார். இவர் நம்ம லிஸ்ட்லயே இல்லையே என எதிரணி பவுலர்கள் நொந்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டவுனில் 62 பந்தில் 97 ரன் விளாசினார் ஆம்லா. டிவில்லியர்ஸை விட இவர் தான் டி20 போட்டிகளில் எதிரணிக்கு கடும் டார்ச்சராய் இருந்தார். கீழே புள்ளிவிவரத்தை பார்த்தால் உங்களுக்கே புரியும்.

நீ கலக்கு சித்தப்பு!

4. மார்டின் கப்டில்:-

டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. மேட்ச் நாக்பூர் மைதானத்தில் நடக்கிறது. சுழலுக்கு சாதகமான மைதானம் என்பதால் அஷ்வினை முதல் ஓவர் வீசச் சொல்கிறார் தோனி. அஷ்வின் முதல் பந்தை வீச மிட்ஆன் திசையில் ஒரு சிக்ஸர் அடித்து உலகக்கோப்பை தொடரை ஆரம்பித்தார் கப்டில். அந்த பாசிட்டிவ் எனெர்ஜி தான் கப்டிலின் பிளஸ். பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் வந்திருந்த போதும் சரி, உலகக்கோப்பையிலும் சரி தனி ஆளாக நின்று பாகிஸ்தான் பவுலர்களின் பந்துவீச்சை சிதறவிட்டு நியூசிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

நீங்கல்லாம் நல்லா வரணும்!

martin guptil
3. ஜாஸ் பட்லர்:-

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மட்டும் தான் இந்தாண்டில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனார் ஜாஸ் பட்லர். அதிரடியாக ஆட வேண்டும் அதே சமயம் அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது கடைசி வரை இருந்து ஃபினிஷர் ரோல் செய்ய வேண்டும் என்ற நிலை எப்போதெல்லாம் இங்கிலாந்து அணிக்கு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பட்லரை அழைப்பார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன். அவரது நம்பிக்கையை காப்பாற்றி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வது பட்லரின் வழக்கம். தென் ஆப்பிரிக்க தொடரிலும் சரி, உலகக்கோப்பையிலும் சரி, இலங்கைத் தொடரிலும் சரி ஃபினிஷர் ரோலை பக்காவாகச் செய்தார் பட்லர். அநேகமாக டி20 போட்டிகளில் இங்கிலாந்தின் அடுத்த கேப்டன் பொறுப்பு இவரைத் தேடி வரலாம்.

வர்லாம் வர்லாம் வா பட்லர்!

butler
2. மேக்ஸ்வெல் :-

தேதி – செப்டம்பர் 6, 2016

இடம் – இலங்கையில் உள்ள பல்லீகல் மைதானம்.

எதிரணி – இலங்கை

அன்றைக்கு மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டம் அம்மாடியோவ்! ஆஸ்திரேலிய அணியில் ஒருநாள் போட்டி, டெஸ்ட் அணிகளில் மேக்ஸ்வெல்லை கழட்டிவிட்டது ஆஸ்திரலியா. இந்நிலையில் இலங்கைத் தொடரில் மோசமாக டெஸ்ட் தொடர் ஆடியது ஆஸி. டி20 தொடருக்கு மட்டும் மேக்ஸ்வெல் அழைக்கப்பட்டார். நான் ஓப்பனிங் பேட்ஸ்மேனா இறங்கணும் என அடம்பிடித்து களமிறங்கினார்.

தனது ஒட்டுமொத்த கோபத்தையும் அந்த மேட்சில் பழிதீர்த்துக் கொண்டார் மேக்ஸ்வெல். 65 பந்தில் 14 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் விளாசி 145 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக களத்தில் நின்றார். என்ன நடக்கிறது என்றே புரியாமல் இலங்கை வீரர்கள் தவித்தனர். அடுத்த போட்டியிலும் 29 பந்தில் ஏழு பவுண்டரி, நான்கு சிக்ஸர்கள் வைத்து 66 ரன்கள் குவித்தார் மேக்ஸ்வெல். முன்னதாக ஜோஹன்னஸ்பார்க்கில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 43 பந்தில் 75 ரன் விளாசினார். எந்த ஆர்டரில் எப்படி இறக்கி விட்டாலும் சிக்ஸர் விளாசும் இந்த நாயகன் டி20 ஃபார்மெட்டின் சூப்பர் ஸ்டார்.

சிறப்பான சம்பவம் செய்ய வாழ்த்துகள்!

maxwell

1. விராட் கோஹ்லி:-

“இது மனிதத் தன்மையற்ற செயல்” . “விராட் கோஹ்லி தயவு செய்து நீங்கள் பேட்டிங் செய்வதை நிறுத்துங்கள், நீங்கள் பேட்டிங் செய்யும் போது கிரிக்கெட்டில் அது தான் எளிதான விஷயம் என்பது போல எல்லோருக்கும் தோன்றுகிறது”.” விராட் ஒரு ஏலியன்” . இப்படி விராட் கோஹ்லியை புகழ்ந்து பலர் பலவிதமாக டிவிட்டரில் எழுதினார்கள். டி20 போட்டியில் இந்தாண்டு விராட் கோஹ்லிக்கு பந்து வீசியவர்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள். அவர் அதிகம் சிக்ஸர் அடிப்பதும் இல்லை, “ஓடி ஓடியே எப்படி இவ்வளவு எளிதாக ரன்களைச் சேர்க்கிறார் என புரியவில்லை. இவருக்கு எப்படி ஃபீல்டர்கள் நிறுத்துவது என்றே தெரியவில்லை” என எதிரணி கேப்டன்கள் புலம்புகிறார்கள்.

virat kohli cricketer
இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டி 20 தொடரில் மூன்று போட்டிகளிலும் அரை சதம் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார் கோஹ்லி. பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆசியக் கோப்பை போட்டியிலும் சரி, உலகக்கோப்பையிலும் சரி அவர் ஆடிய சரவெடி ஆட்டம், காலிறுதியில் ஆஸ்திரேலியாவை நொறுக்கிய கதை ஆகியவற்றை ரீவைண்ட் செய்து பார்ப்பதே கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்வு தரும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.