Breaking News
சென்னை ஓபன் டென்னிஸ்: தகுதி நிலை வீரரிடம் வீழ்ந்தார், மரின் சிலிச் இரட்டையரில் போபண்ணா– ஜீவன் ஜோடி வெற்றி

சென்னை ஓபன் டென்னிசில் முன்னாள் சாம்பியன் குரோஷியாவின் மரின் சிலிச், தகுதி நிலை வீரர் சுலோவக்கியாவின் கோவலிக்கிடம் போராடி வீழ்ந்தார்.

டென்னிஸ் போட்டி
சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் திருவிழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று மிகப்பெரிய அதிர்ச்சி தோல்வி அரங்கேறியது.

மகுடம் சூடும் வாய்ப்புள்ள வீரராக கணிக்கப்பட்ட உலக தரவரிசையில் 6–வது இடம் வகிப்பவரும், போட்டித் தரவரிசையில் முதலிடம் பெற்றவருமான மரின் சிலிச் (குரோஷியா) நேரடியாக 2–வது சுற்றில் களம் இறங்கினார். அவரை தகுதி சுற்றில் விளையாடி அதன் மூலம் பிரதான சுற்றுக்குள் அடியெடுத்து வைத்த ஜோஸிப் கோவலிக் (சுலோவக்கியா) எதிர்கொண்டார்.

2014–ம் ஆண்டு அமெரிக்க ஓபனை வென்றரான மரின் சிலிச், ‘கத்துக்குட்டி’ கோவலிக்கை எளிதில் பந்தாடிவிடுவார் என்று தான் அனைவரும் நினைத்திருப்பர். ஆனால் களத்தில் நிலைமையோ தலைகீழாக மாறியது. சிலிச்சுக்கு எல்லா வகையிலும் கோவலிக் ஈடுகொடுத்து விளையாடினார். பந்தை அசுர வேகத்தில் வலுவாக திருப்புதில் வியப்புக்குரிய வகையில் செயல்பட்ட கோவலிக், சிலிச்சை அங்கும் இங்குமாக ஓட விட்டார்.

சர்வீஸ் பிரேக்
முதலாவது செட்டில் இருவரும் தங்களது சர்வீசை புள்ளிகளாக மாற்றுவதில் மட்டும் குறியாக இருந்தனர். இதனால் 6–6 என்று வரை சமநிலையே நீடித்தது. இதையடுத்து ‘டைபிரேக்கர்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதிலும் ஒரு கட்டத்தில் 5–5 என்று சமநிலை வந்தாலும், அதன் பிறகு கோவலிக்கின் கை ஓங்கியது. முதலாவது செட்டை 57 நிமிடங்களில் தன்வசப்படுத்தினார்.

இரண்டாவது செட்டிலும் இதே போன்று அனல் பறந்தது. 2–வது கேமில் கோவலிக்கின் சர்வீசை முதல் முறையாக ‘பிரேக்’ செய்த சிலிச் அதன் பிறகு 4–2 என்று முன்னிலையை உருவாக்கினார். அடுத்ததாக 7–வது கேமில் சிலிச்சின் சர்வீசை கோவலிக் தகர்த்து பதிலடி கொடுக்க மறுடியும் 5–5 என்று சமநிலை வந்தது. அதன் பிறகு ஒரு வழியாக சிலிச் 12–வது கேமில் எதிராளியின் சர்வீசுக்கு முடிவு கட்டி, அந்த செட்டை தன்னகத்தே வசப்படுத்திக் கொண்டார்.

கோவலிக் வெற்றி
இதைத் தொடர்ந்து ஆட்டம் 3–வது செட்டுக்கு நகர்ந்தது. இந்த செட்டிலும் ‘நீயா–நானா’ என்று இருவரும் கடுமையாக மல்லுகட்டினர். இருவரும் எந்த ஒரு தருணத்திலும் ‘பிடி’யை தளரவிடாமல் போராடியதால் ரசிகர்களுக்கு ஆட்டம் நல்ல விருந்தாக அமைந்தது. இதில் முதல் 10 கேம்களில் இருவரும் தங்களது சர்வீசை மட்டும் சாதகமாக மாற்றிக் கொண்டனர்.

இந்த பரபரப்பான சூழலில் 11–வது கேமில் சிலிச்சின் சர்வீசுக்கு, கோவலிக் ‘வேட்டு’ வைத்தார். இதனால் 12–வது கேமில் கோவலிக்கின் சர்வீசை கட்டாயம் ‘பிரேக்’ செய்ய வேண்டிய நெருக்கடிக்கு சிலிச் தள்ளப்பட்டார். இந்த கேமில் மூன்று முறை 40–40 என்று மாறிமாறி வந்தது. எப்படியும் சிலிச், சிலிர்த்தெழுவார் என்று ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. 12–வது கேமை கைப்பற்றிய கோவலிக் வெற்றிக்கனியையும் தட்டிப்பறித்தார்.

2 மணி 48 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த இந்த ஆட்டத்தில் கோவலிக் 7–6 (7–5), 5–7, 7–5 என்ற செட் கணக்கில் சிலிச்சை வெளியேற்றி கால்இறுதிக்கு முன்னேறினார். சிலிச்சை மிரள வைத்த 24 வயதான கோவலிக் உலக தரவரிசையில் 117–வது இடத்தில் இருப்பவர் ஆவார். 18 ஏஸ் சர்வீஸ்களை வீசிப் பார்த்தும் சிலிச்சுக்கு பலன் இல்லாமல் போய் விட்டது.

முன்னாள் சாம்பியன்
28 வயதான மரின் சிலிச், 2009, 2010–ம் ஆண்டுகளில் சென்னை ஓபனில் பட்டம் வென்றவர் ஆவார். சென்னை ஓபன் வரலாற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடம் பெற்ற ஒரு வீரர் தொடக்க நிலையிலேயே (முதல் சுற்று அல்லது 2–வது சுற்று) வெளியேறுவது இது 6–வது நிகழ்வாகும். கடைசியாக 2010–ம் ஆண்டு சுவீடனின் ராபின் சோடர்லிங் இவ்வாறு போட்டிதரவரிசையில் முதலிடத்தை பெற்று முதல் சுற்றிலேயே மூட்டையை கட்டியிருந்தார்.

மற்ற ஆட்டங்களில் அல்பெர்ட் ரமோஸ் வினோலஸ் (ஸ்பெயின்) 6–2, 6–0 என்ற நேர் செட்டில் பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிசையும், டேனில் மெட்விதேவ் (ரஷியா) 6–4, 6–3 என்ற நேர் செட்டில் சீனத்தைபேயின் ஹூன் லுவையும் தோற்கடித்து கால்இறுதியை எட்டினர்.

போபண்ணா ஜோடி அபாரம்
இரட்டையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா–ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6–4, 6–4 என்ற நேர் செட்டில் நிகோலா மெக்டிச் (குரோஷியா)– மார்செலோ டெமோலினெர் (பிரேசில்) இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.