Breaking News
சென்னை ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் யுகி பாம்ப்ரி தோல்வி இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி அரைஇறுதிக்கு தகுதி

சென்னை ஓபன் டென்னிசின் 2-வது சுற்றில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தோல்வி அடைந்தார். அதே சமயம் இரட்டையரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

யுகி பாம்ப்ரி ஏமாற்றம்

தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏ.டி.பி. தொடரான சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடந்து வருகிறது.

நேற்று நடந்த ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போட்டித்தரநிலையில் 5-வது இடம் வகிக்கும் பிரான்சின் பெனோய்ட் பேர், இந்திய இளம் வீரர் யுகி பாம்ப்ரியை எதிர்கொண்டார். இதில் அனுபவம் வாய்ந்த பெனோய்ட் பேருக்கு எதிராக யுகி பாம்ப்ரி ஓரளவு சவால் கொடுத்தாரே தவிர, அவரது அதிரடியான ஷாட்டுகளை முழுமையாக சமாளிக்க முடியாமல் தடுமாறினார். அவரால் பெனோய்ட் பேரின் ஒரு சர்வீசை கூட ‘பிரேக்’ செய்ய இயலவில்லை.

1 மணி 25 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பெனோய்ட் பேர் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் யுகி பாம்ப்ரியை தோற்கடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

சவால் முடிந்தது

யுகியின் தோல்வியின் மூலம் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே ராம்குமார், சகெத் மைனெனி ஆகிய இந்திய வீரர்களும் தோற்று போய் விட்டனர். 21 ஆண்டு கால சென்னை ஓபன் வரலாற்றில் ஒற்றையர் பிரிவில் இதுவரை எந்த இந்தியரும் மகுடம் சூடியது இல்லை. அந்த சோகம் இந்த முறையும் தொடருகிறது.

மற்றொரு ஆட்டத்தில் 2008-ம் ஆண்டு சாம்பியனான ரஷியாவின் மிகைல் யூஸ்னி 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினாவின் ரென்ஜோ ஆலிவோவை விரட்டினார்.

பெடேனின் ‘யுத்தம்’

இதே போல் இங்கிலாந்தின் அல்ஜாஸ் பெடேன் 7-6 (3), 6-7 (3), 7-6 (2) என்ற செட் கணக்கில் தன்னை எதிர்த்த சுலோவக்கியாவின் மார்ட்டின் கிளைஜானை வீழ்த்தினார். 3 செட்டிலும் ‘டைபிரேக்கர்’ கடைபிடிக்கப்பட்ட இந்த யுத்தம் 3 மணி 5 நிமிடங்கள் நீடித்தது.

உலக தரவரிசையில் 14-வது இடத்தில் இருப்பவரும், போட்டித்தரவரிசையில் 2-வது இடம் பெற்றவரான ஸ்பெயினின் ராபெர்ட்டா பாவ்டிஸ்டா அகுத் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரோஜரியா டுட்ரா சில்வாவை (பிரேசில்) பந்தாடினார். பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள வீரராக வர்ணிக்கப்படும் பாவ்டிஸ்டா அகுத் கால்இறுதியில் மிகைல் யூஸ்னியை சந்திக்கிறார்.

சரிவில் இருந்து மீண்ட போபண்ணா

நேற்றிரவு அரங்கேறிய இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன் கூட்டணி, ஜேம்ஸ் செரெட்டானி (அமெரிக்கா), பிலிப் ஆஸ்வால்ட் (ஆஸ்திரியா) ஜோடியை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு ஜோடியும் தலா ஒரு செட்டை கைப்பற்றிய நிலையில், ஆட்டம் சூப்பர்- டைபிரேக்கருக்கு சென்றது. டைபிரேக்கரில் ஒரு கட்டத்தில் 5-5 என்று சமநிலை நீடித்தது. அதன் பிறகு ரோகன் போபண்ணா அடுத்தடுத்து பந்தை வெளியே அடித்ததால் பின்னடைவு ஏற்பட்டது. 9-7 என்ற புள்ளி கணக்கில் செரெட்டானி-ஆஸ்வால்ட் ஜோடி முன்னிலை பெற்று வெற்றியின் விளிம்புக்கு சென்றது.

பின்தங்கி இருந்தாலும் போபண்ணா ஜோடி துளியும் நம்பிக்கையை விட்டுவிடவில்லை. எதிரணியின் மூன்று ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு 10-10 என்று சமநிலைக்கு கொண்டு வந்தனர். அதன் பிறகு அடுத்தடுத்து இரு புள்ளிகளை போபண்ணா இணை வசப்படுத்தி உள்ளூர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

71 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் போபண்ணா -நெடுஞ்செழியன் ஜோடி 6-2, 3-6, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றியை சுவைத்து அரைஇறுதிக்கு முன்னேறியது.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.