Breaking News
பொதுஇடத்தில் பெண் மானபங்கம் சம்பவத்தை வைத்து பெங்களூரு பாதுகாப்பற்ற நகரம் என்ற பெயரை உருவாக்கக்கூடாது போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பரபரப்பு பேட்டி

பொதுஇடத்தில் பெண் மானபங்கம் சம்பவத்தை வைத்து பெங்களூரு பாதுகாப்பற்ற நகரம் என்ற பெயரை உருவாக்கக்கூடாது என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

துரதிருஷ்டவசமானது
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்ற நாள் இரவு ஒரு விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தது. அதாவது கம்மனஹள்ளியில் நள்ளிரவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை பொது இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது. இது துரதிருஷ்டவசமானது.

பெங்களூரு அமைதியான நகரம் ஆகும். ஆனால் இந்த சம்பவத்தை வைத்து பெங்களூரு பாதுகாப்பற்ற நகரம் என்ற பெயரை உருவாக்கக்கூடாது. பெங்களூரு பாதுகாப்பான நகரம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இந்த ஒரு சம்பவத்தை முன் வைத்து பெங்களூரு நகரம் பாதுகாப்பானது இல்லை என்று கூறுவது தவறானது. பெங்களூருவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

4 பேர் கைது
பெண் மானபங்கபடுத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சதி உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதை இப்போதே சொல்ல முடியாது. இன்னும் 2, 3 நாட்களில் எல்லா தகவல்களும் வெளிவரும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இதுகுறித்து நான் தெரிவித்த கருத்துகள் திரிக்கப்பட்டுள்ளன. நான் தவறான எண்ணத்தில் அத்தகைய கருத்துகளை சொல்லவில்லை. நான் பெண்களை எப்போதும் தவறாக பேசியது இல்லை. நான் பெண்களை மரியாதையாக பார்க்கும் கலாசாரம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவன்.

பாதுகாப்பு கொடுக்க…
அதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெங்களூரு பாதுகாப்பான நகரம் ஆகும். அமைதிக்கு பெயர் பெற்ற இந்த நகரின் பெயரை வேறு திசைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளை யாரும் செய்யக்கூடாது. குழந்தைகள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க அரசு எப்போதும் தயாராக உள்ளது.

நான் போலீஸ் மந்திரியாக பதவி ஏற்றபோது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என்று கூறினேன். இந்த வி‌ஷயத்தில் எப்போதும் சமரசத்திற்கு இடம் இல்லை. புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களுக்கு நடைபெற்ற பாலியல் தொல்லை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தை காண்காணிக்க ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர். 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

5,000 கண்காணிப்பு கேமராக்கள்
பெண்கள் மீது நடைபெறும் இத்தகைய பாலியல் வன்முறை சம்பவங்கள் கர்நாடக மாநிலத்திற்கு நற்பெயரை தராது. இந்த சம்பவங்களை கன்னடர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். பெண் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவத்தில் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் கைப்பற்றி, அதில் இடம் பெற்றுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். பெங்களூருவில் சில முக்கியமான பகுதிகளில் 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்துள்ளோம்.

இதில் முதல் கட்டமாக 550 கண்காணிப்பு கேமராக்களை அடுத்த 2 மாதங்களில் ரூ.39 கோடி செலவில் அமைக்கப்படும். போலீஸ் துறையில் தற்போது மகளிர் போலீசார் 5 சதவீதம் பேர் தான் உள்ளனர். இதை 20 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். மகளிர் போலீசார் நியமனத்திற்கு தனியாக விதிமுறைகளை வகுக்கப்படும். நகரில் போலீஸ் கட்டுப்பாட்டு மையத்தில் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள ‘100‘ என்ற எண்ணில் 15 இணைப்புகள் உள்ளன. இதை 100 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளோம். இதற்கு ரூ.14 கோடி செலவாகும்.

கவர்னருக்கு அறிக்கை
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. அதற்கு நான் உரிய பதில் அனுப்புவேன். டெல்லி மாநில அரசின் மகளிர் ஆணையமும் எனக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் அந்த ஆணையத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடக்கவில்லை. இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். இது தொடர்பாக கவர்னரும் அறிக்கை கேட்டுள்ளார். அவருக்கு அறிக்கையை அனுப்பி வைப்போம்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

இந்த பேட்டியின்போது போலீஸ் மந்திரியின் ஆலோசகர் கெம்பையா, போலீஸ் டி.ஜி.பி. ஓம்பிரகாஷ், மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரவீன்சூட் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.