Breaking News
சென்னை ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா சாம்பியன் இரட்டையர் பிரிவில் போபண்ணா–ஜீவன் ஜோடிக்கு பட்டம்

சென்னை ஓபன் டென்னிஸ் திருவிழாவில், ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா– ஜீவன் நெடுஞ்செழியன் இணை கோப்பையை வசப்படுத்தியது.

சென்னை ஓபன் டென்னிஸ்
தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. தொடரான 22–வது சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் கடந்த 2–ந்தேதி தொடங்கியது. ஒற்றையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் சாம்பியன் குரோஷியாவின் மரிச் சிலிச் முதல் ஆட்டத்திலேயே வீழ்ந்து மூட்டையை கட்டினார்.

உலக தரவரிசையில் 14–வது இடம் வகிக்கும் ராபெர்ட்டா பாவ்டிஸ்டா அகுத்தும் (ஸ்பெயின்), 99–ம் நிலை வீரர் டேனில் மெட்விதேவும் (ரஷியா) இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தனர். இந்த நிலையில் இவர்களில் யார் சாம்பியன்? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் நேற்று அரங்கேறியது.

ரசிக்க வைத்த ஷாட்
இதில் அனுபவம் வாய்ந்த பாவ்டிஸ்டா சாதுர்யமாக செயல்பட்டார். அதாவது எதிராளியின் ஏதாவது சர்வீசை மட்டும் முறியடித்து விட்டு, அதன் பிறகு தமது சர்வீஸ்களை புள்ளிகளை மாற்றுவது என்ற இலக்குடன் பேட்டை சுழட்டினார். அதற்கு கைமேல் பலன் கிட்டியது. 4–வது கேமில் மெட்விதேவின் சர்வீசை பிரேக் செய்த பாவ்டிஸ்டா, அதன் மூலம் முதலாவது செட்டை 34 நிமிடங்களில் சொந்தமாக்கினார்.

2–வது செட்டில் மெட்விதேவ் ஓரளவு சவால் கொடுத்தார். இதில் 3–வது கேமில் ஒரு முறை இருவரும் நீயா–நானா? என்று விடாமல் ஷாட்டுகளை தொடுத்தனர். இவ்வாறு 30 ஷாட்கள் வரை நீடித்ததால் ரசிகர்கள் பரவசத்திற்குள்ளானார்கள். இந்த ‘திரிலிங்’ அகுத் பந்தை வலையில் அடித்ததன் மூலம் முடிவுக்கு வந்தது. இதே போல் இருவரும் முன்பக்கம் வந்து விளையாடிய விதமும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

பாவ்டிஸ்டா சாம்பியன்
மற்றபடி ஆட்டம் ஒருதரப்பு என்றே வர்ணிக்க வேண்டும். மெட்விதேவ், 8 ‘ஏஸ்’ சர்வீஸ்கள் போட்டாலும் நிறைய தவறுகளை இழைத்து புள்ளிகளை தாரை வார்த்தார்.

இந்த செட்டில் 8–வது கேமில் சர்வீசை பாவ்டிஸ்டா முறியடித்த போது, அந்த தருணமே வெற்றிக்கனி அவரது மடியில் விழுந்தது போல் ஆகி விட்டது. அதன் பிறகு பாவ்டிஸ்டா தனது சர்வீசில் வெற்றியை உறுதியாக்கினார். ஆட்டத்தின் கடைசி ஷாட்டை மெட்விதேவ் வெளியே விரட்டி வீணடித்தார்.

1 மணி 13 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பாவ்டிஸ்டா 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 28 வயதான பாவ்டிஸ்டா சென்னை ஓபனை வெல்வது இதுவே முறையாகும். இதற்கு முன்பு 2013–ம் ஆண்டில் இறுதி ஆட்டத்தில் தோற்று இருந்த பாவ்டிஸ்டா இந்த முறை தனது ஏக்கத்தை தணித்துக் கொண்டார். மொத்தத்தில் இது அவரது 5–வது சர்வதேச பட்டாகும். கார்லஸ் மோயாவுக்கு பிறகு (2004, 2005–ம் ஆண்டு) சென்னை ஓபனை வென்ற முதல் ஸ்பெயின் நாட்டவர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

சாம்பியன் பட்டத்தை தனதாக்கிய பாவ்டிஸ்டாவுக்கு ரூ.54 லட்சத்துடன் 250 தரவரிசை புள்ளிகளும், மெட்விதேவுக்கு ரூ.28 லட்சத்துடன் 150 தரவரிசை புள்ளிகளும் வழங்கப்பட்டன.

மெட்விதேவ் கருத்து
ஏ.டி.பி. தொடர் ஒன்றில் முதல் முறையாக இறுதிப்போட்டியை எட்டிய 20 வயதான மெட்விதேவ் கூறும் போது, ‘சென்னை ஓபன் போட்டி எனக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்திருக்கிறது. பங்கேற்ற முதல் முயற்சியிலேயே இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறேன். இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக நான் பேட்டி அளிக்கும் போது, ‘என்னிடம் இறுதிப்போட்டிக்கு வருவீர்களா’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘ஆமாம்’ என்று பதில் அளித்தேன். அதை செய்து காட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

2–வது செட்டின் போது வலது காலில் லேசான வலி இருந்ததால், ‘டைம்–அவுட்’ கேட்டு எனது ஆலோசகரை அழைத்து உதவி பெற்றேன். மற்றபடி தோல்விக்கு அதை காரணமாக சொல்லமாட்டேன். பாவ்டிஸ்டாவின் ஆட்டம் வியப்புக்குரிய வகையில் இருந்தது. என்னால் ஒரு சர்வீசை கூட பிரேக் செய்ய முடியவில்லை’ என்றார்.

போபண்ணா ஜோடி சாம்பியன்
இதைத் தொடர்ந்து இரவில் நடந்த இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, மற்றொரு இந்தியர்களான புராவ் ராஜா– திவிஜ் சரண் இணையை எதிர்கொண்டது. 21 ஆண்டு கால சென்னை ஓபன் வரலாற்றில் இறுதி ஆட்டத்தில் 4 இந்தியர்கள் சந்தித்துக் கொண்டது இதுவே முதல் முறையாகும்.

விறுவிறுப்பான இந்த மோதலில் போபண்ணா கூட்டணி 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தனதாக்கியது.

இந்திய மூத்த வீரர் லியாண்டர் பெயஸ், சக நாட்டவர் மகேஷ் பூபதியுடன் இணைந்து இங்கு 5 முறை (1997, 1998, 1999, 2002, 2011) பட்டம் வென்றிருந்தார். மேலும் லியாண்டர் பெயஸ், செர்பியாவின் ஜாங்கோ டிப்சரேவிச்சுடன் இணைந்து 2012–ம் ஆண்டிலும் சென்னை ஓபனை கைப்பற்றி இருந்தார். அதன் பிறகு சென்னை ஓபனில் இந்தியர்கள் மகுடம் சூடுவது இதுவே முதல் முறையாகும்.

பரிசு எவ்வளவு?
சென்னையைச் சேர்ந்த 28 வயதான ஜீவன் நெடுஞ்செழியன் சுவைத்த முதல் சர்வதேச பட்டம் இதுவாகும். அதே சமயம் பெங்களூருவில் வசிக்கும் போபண்ணாவுக்கு இது 15–வது இரட்டையர் பட்டமாகும். சாதனை படைத்த ரோகன் போபண்ணா– ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடிக்கு ரூ.16 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2–வது இடத்தை பிடித்த புராவ்–திவிஜ் ரூ.8½ லட்சத்தை பரிசாக பெற்றனர்.

‘முதல் 10 இடங்களுக்குள் நுழைய முயற்சிபேன்’

‘‘திட்டமிட்டு செயல்பட்ட வகையில் இது எனக்கு சிறந்த ஆட்டமாக அமைந்தது. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். தேவையான நேரத்தில் ஆக்ரோ‌ஷத்தை காட்டினேன். சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா கடந்த 3 முறை இங்கு பட்டம் வென்ற போதெல்லாமல் ஏதாவது ஒரு கிராண்ட்ஸ்லாமை வென்று இருக்கிறார். அது போல் உங்களுக்கு நடக்குமா? என்று கேட்கிறீர்கள். நிச்சயம் அது கடினமான வி‌ஷயம். இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கால்இறுதியில் விளையாட விரும்புகிறேன். அது தான் எனது இலக்கு. இதே போல் தரவரிசையில் டாப்–10 இடத்திற்குள் நுழைய முயற்சிப்பேன். ஆனால் இதை செய்வது கடினமானது. மெட்விதேவ் உயரமாக இருக்கிறார். நன்றாக சர்வீஸ் போடுகிறார். அங்கும் இங்குமாக ஓடி பந்தை அருமையாக திருப்புகிறார். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. அடுத்த முறையும் நான் சென்னைக்கு வந்து விளையாட வாய்ப்பு உள்ளது. ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் எனது காதலிக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’’

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.