Breaking News
கடந்த 2½ ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீடு ரூ.8.84 லட்சம் கோடி ஆக உயர்வு பிரதமர் மோடி தகவல்

கடந்த 2½ ஆண்டுகளில், அன்னிய நேரடி முதலீடு ரூ.8 லட்சத்து 84 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

குஜராத் மாநாடு
‘துடிப்பான குஜராத்’ என்ற பெயரில், உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு, குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று தொடங்கியது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

மாநாட்டில் அவர் பேசியதாவது:–

‘மேக் இன் இந்தியா’ திட்டம், இதுவரை நாடு காணாத பெரிய திட்டமாக உருவெடுத்துள்ளது. பல்வேறு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகளை தளர்த்தி உள்ளோம். அதனால், அன்னிய நேரடி முதலீடு குவிந்து வருகிறது. கடந்த 2½ ஆண்டுகளில், இந்த முதலீடு ரூ.8 லட்சத்து 84 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.

முதலிடம்
கடந்த 2 நிதி ஆண்டுகளில் வந்த அன்னிய நேரடி முதலீடு, அதற்கு முந்தைய 2 நிதி ஆண்டுகளில் வந்த முதலீட்டை விட 66 சதவீதம் அதிகம் ஆகும். அதிலும், கடந்த ஆண்டு கிடைத்த அன்னிய முதலீடு, இதுவரை கிடைக்காத அதிக தொகை.

ஆசிய–பசிபிக் நாடுகளில், அதிக முதலீட்டை பெற்றுள்ள நாடு இந்தியாவே ஆகும். மேலும், இந்த வி‌ஷயத்தில், உலக அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. முதலீட்டாளர்களுக்கு ஆதாயம் அளிப்பதும் இந்தியாதான்.

முன்னுரிமை பணி
வர்த்தகம் செய்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதுடன், முதலீடுகளை ஈர்ப்பதுதான் எனது முன்னுரிமை பணி. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக, இதை நாம் செய்ய வேண்டும்.

இதுபோல், லைசென்ஸ் வழங்கும் முறையையும் எளிமைப்படுத்தி உள்ளோம். நமது கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் உண்டாக்கிய நல்ல தாக்கத்தால், நமது நம்பிக்கை அதிகரித்துள்ளது. இது, வர்த்தகம் செய்வதற்கு உகந்த நாடாக இந்தியாவை ஆக்குவதற்கான தூண்டுதலை அளிக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.